தனது 13-வது வயது முதல் ஏறக்குறைய 80 ஆண்டுகாலம் இந்திய இசைக் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்த குரல் இன்று தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. ஆம், பாரத ரத்னா, தாதா சாகேப் பால்கே, பத்ம பூஷண், பத்ம விபூஷண் என்ற பல்வேறு விருதுகளைப் பெற்ற பழம்பெரும் பாடகி, இந்திய சினிமாவின் ‘நைட்டிங்கேல்’ லதா மங்கேஷ்கர் இன்று மறைந்து விட்டார்.
1929ஆம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தவர் லதா மங்கேஷ்கர். ஐந்து குழந்தைகளில் மூத்தவரான லதா மங்கேஷ்கர் தன் ஐந்தாவது வயதிலேயே இசைப் பயிற்சியை தொடங்கி விட்டார். தன்னுடைய 13 வயதில் தந்தையை இழந்து குடும்ப பாரத்தை சுமக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். லதா தன் தந்தையின் நெருங்கிய நண்பரான விநாயக் என்பவரது உதவியுடன் 1942ஆம் ஆண்டு மராத்தி திரைப்படமான ‘கிஸி ஹசாய்’ என்ற படத்தில் ஒரு பாடலை பாடினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்பாடல் படத்தில் இடம்பெறவில்லை. ஆனால் அதே ஆண்டு வெளியான ‘பஹ்லி மங்களா கவுர்’ என்ற படத்தில் லதாவுக்கு ஒரு சிறிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் ஒரு பாடலை பாடும் வாய்ப்பையும் லதா பெற்றார். 1943ஆம் ஆண்டு வெளியான ‘கஜாபாவ்’ என்ற திரைப்படத்தில் தான் முதன்முதலாக ஒரு இந்திப் பாடலை லதா பாடினார்.
1945 ஆம் ஆண்டு மும்பைக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்த லதா அங்கு இந்துஸ்தானி இசையை கற்றுக் கொள்ளத் தொடங்கினார். அதன் பிறகு விநாயக்கின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படங்களில் லதாவும் அவரது தங்கை ஆஷாவுக்கும் சின்னச் சின்ன வேடங்கள் கிடைக்கத் தொடங்கின.
» பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவு: அரை நூற்றாண்டாக தேனிசைக் குரலால் ரசிகர்களை மகிழ்வித்தவர்
1948ஆம் ஆண்டு விநாயக்கின் மறைவு லதாவையும் அவரது குடும்பத்தையும் நிர்கதியாக்கியது. ஆதரவின்றி தவித்த அவர்களுக்கு இசையமைப்பாளர் குலாம் ஹைதர் உதவிக்கரம் நீட்டினார். லதாவை அழைத்துக் கொண்டு அப்போது இந்தி சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருந்த ஒருவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். ஆனால் அந்த தயாரிப்பாளரோ உன் குரல் மிகவும் மெல்லியதாக இருக்கிறது என்று கூறி லதாவுக்கு வாய்ப்பு வழங்க மறுத்துவிட்டார். கோபமடைந்த குலாம் “வருங்காலங்களில் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களில் ஒரு பாடலாவது நீங்கள் பாடவேண்டும் என்று இந்த பெண்ணின் காலில் விழுவார்கள்” என்று சொல்லிவிட்டு லதாவை அங்கிருந்து அழைத்துச் சென்று விட்டார்.
அதே ஆண்டு வெளியான ‘மஜ்பூர்’ என்ற படத்தில் “தில் மேரா தோடா” என்ற பாடலை பாடும் வாய்ப்பை குலாம் ஹைதர் லதாவுக்கு வழங்கினார். இப்பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. கூடவே லதாவும் பிரபலமாகி விட்டார். இதனால் தான் பின்னாட்களில் ஒரு பேட்டியில் குலாம் ஹைதர் தான் தன்னுடைய உண்மையான குருநாதர் என்று லதா உணர்வுப்பூர்வமாக தெரிவித்தார் என்பது குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.
லதா தன் ஆரம்ப நாட்களில் அப்போது பிரபல பாடகியாக இருந்த நூர்ஜஹானை பிரதியெடுப்பதாக அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் சில நாட்களிலேயே அதையெல்லாம் தவிடுபொடியாக்கி தனக்கென ஒரு தனித்துவமான பாதையை உருவாக்கி புகழின் உச்சிக்குச் சென்றார் லதா மங்கேஷ்கர். லதாவின் உருது மொழி உச்சரிப்பு சரியாக இல்லை என்று நடிகர் திலீப் குமார் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். உடனடியாக ஒரு உருது ஆசிரியரிடம் ஒரே மூச்சாக உருது மொழியைக் கற்றுக் கொண்டு அதிலும் தேர்ந்தார் லதா.
1950களில் லதா மங்கேஷ்கரின் குரல் இல்லாத படங்களே இல்லை என்று நிலை உருவானது. ஷங்கர் ஜெய்கிசான், நௌஷாத் அலி, எஸ்.டி. பர்மன் தொடங்கி சஜ்ஜாத் ஹுசைன் வரை அந்த ஆண்டில் பிரபலமாக இருந்த அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் லதா பாடினார். 1956ஆம் ஆண்டு வெளியான ‘உரான் கோட்டாலா’ இந்திப் படம் தமிழில் ‘வானரதம்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இப்படத்தில் இடம்பெற்ற ‘எந்தன் கண்ணாலன்’ என்ற பாடலை லதா பாடியிருந்தார். ’’
50களில் லதாவின் குரலுக்கென்று நாடு முழுவதும் பெரும் ரசிகர் கூட்டம் உருவானது. 1960ஆம் ஆண்டு வெளியான ‘முகல் இ அஸாம்’ திரைப்படம் லதாவின் புகழை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. நௌஷாத் அலி இசையில் ஒன்பது பாடல்களை லதா இப்படத்துக்காக பாடியிருந்தார். 9 பாடல்களும் அதிரிபுதிரி ஹிட்டடித்து பெரும் வரவேற்பை பெற்றன. லதாவின் குரலுக்காகவே பல்லாயிரக்கணக்கான ரெக்கார்டுகள் விற்றுத் தீர்ந்தன. இப்படத்தின் பாடல்கள் இன்று வரை பிரபலமாக இருந்து வருகின்றன.
அதே போல 70களில் பிரபலமாக இருந்த கிஷோர் குமார், முஹம்மது ரஃபி, முகேஷ், எஸ்.பி. பாலசுப்ரமணியன் தொடங்கி தற்கால பாடகர்களான உதித் நாரயணன், சோனு நிகம், அத்னான் சமி என ஏராளமான பாடகர்களோடு லதா சேர்ந்து பாடியுள்ளார். இளையராஜா இசையில் ‘சத்யா’ படத்தில் எஸ்.பி.பியுடன் அவர் இணைந்து பாடிய ‘வளையோசை கலகலவென’ பாடல் எவர்க்ரீன் காதல் பாடலாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. 2006ஆம் ஆண்டு ‘ரங் தே பசந்தி’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானோடு அவர் பாடிய ‘லுக்கா சுப்பி’ என்ற பாடல் இளைஞர்களின் ஆல் டைம் ஃபேவரிட்டாக இருந்து வருகிறது.
1955-லேயே ‘ராம் ராம் பாவ்னே’ என்ற மராத்தி படத்துக்கு லதா மங்கேஷ்கர் இசையமைத்துள்ளார். அதன் பிறகு 60களில் வெளியான ஐந்து மராத்தி படங்களுக்கு ஆனந்த் கன் என்ற பெயரில் இசையைத்துள்ளார் லதா. இதில் ‘சதி மனாசே’ என்ற படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான மகாராஷ்டிர அரசின் விருதைப் பெற்றார்.
இது தவிர பத்ம பூஷண், பத்ம விபூஷண், தாதா சாகேப் பால்கே, மூன்று தேசிய விருதுகள், 7 ஃபிலிம் ஃபேர் விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை லதா பெற்றுள்ளார். 2001ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது லதா மங்கேஷ்கருக்கு வழங்கப்பட்டது. ‘பாரத ரத்னா’ விருது வென்ற இரண்டாவது பாடகி என்ற பெருமையை லதா பெற்றார். முதலாமவர் மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி.
எந்த திலீப் குமார் லதாவின் உருது மொழி உச்சரிப்பு குறித்து விமர்சனம் செய்தாரோ அதே திலீப் குமார் லதாவின் குரல் கடவுளிடமிருந்து வந்த அற்புதம் என்று பின்னாட்களில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.
1948 முதல் 1987 வரை 30,000க்கும் அதிகமான பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்தார் லதா மங்கேஷ்கர். ஆனால் ஒரு பேட்டியில் இது குறித்து லதா மங்கேஷ்கர் பேசும்போது, “நான் எத்தனை பாடல்களை பாடுகிறேன் என்று நான் கணக்கெடுப்பதில்லை. ஆனால் கின்னஸ் நிர்வாகத்தினர் அந்த தகவல்கள் எப்படி கிடைத்தன என்று தெரியவில்லை” என்று கூறியிருந்தார்.
இந்திய இசையின் வரலாற்றை லதா மங்கேஷ்கரை தவிர்த்து எழுதிவிட முடியாது. அந்த அளவுக்கு ஏறக்குறைய மொழிகளில் 36 பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள அந்த மந்திரக் குரல் இசை ரசிகர்களின் மனதில் என்றென்றும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago