இந்தி பிக் பாஸ் சீசன் 15 நிறைவு - வெற்றியாளராக தேஜஸ்வி பிரகாஷ் தேர்வு

By செய்திப்பிரிவு

இந்தி பிக் பாஸ் சீசன் 15 வெற்றியாளராக தேஜஸ்வி பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆண்டு தோறும் கலர்ஸ் டிவியில் (இந்தியில்) ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. இதனை ஒவ்வோர் ஆண்டும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியின் 15-வது சீசன் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனையும் வழக்கம்போல சல்மான் கானே தொகுத்து வழங்கினார். இதில் தேஜஸ்வி பிரகாஷ், ப்ரதிக், ஷமிதா, கரண் குந்த்ரா, அஃப்ஷானா கான், விதி பாண்டியா, நிஷாந்த், ராக்கி உள்ளிட்ட 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். வாரம் ஒருவர் அல்லது இருவர் என்ற வீதத்தில் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு, இறுதி வாரத்துக்குள் தேஜஸ்வி, ப்ரதிக், கரண், ஷ்மிதா, நிஷாந்த், ரஷாமி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 15 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்வு நேற்று (ஜன 30) நடைபெற்றது. இதில் தேஜஸ்வி பிரகாஷ் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். ப்ரதிக் ரன்னராக அறிவிக்கப்பட்டார். வெற்றிபெற்ற தேஜஸ்வியிடம் பிக் பாஸ் கோப்பையையும், ரூ.40 லட்சத்துக்கான காசோலையையும் சல்மான் கான் வழங்கினார். தேஜஸ்விக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

மும்பையை பிறப்பிடமாகக் கொண்ட தேஜஸ்வி பிரகாஷ் ஒரு பொறியியல் பட்டதாரி. மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வம் கொண்ட இவர் 2012ஆம் ஆண்டு ஒரு தனியார் சேனலில் பணிக்கு சேர்ந்தார். அதன் பிறகு 2013ஆம் ஆண்டு வெளியான ‘சன்ஸ்கார்’ என்ற தொடரில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘ஸ்வராகினி’, ‘பெஹ்ரதார் பியா கி’ உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்தார். 2020ஆம் ஆண்டு கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான ‘ஃபியர் ஃபேக்டார்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். ‘ஸ்கூல் காலேஜ் அனி லைஃப்’ என்ற மராத்தி திரைப்படம் ஒன்றில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE