கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மீது வழக்கு தொடர்ந்த பாலிவுட் இயக்குநர் 

By செய்திப்பிரிவு

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மீது பாலிவுட் இயக்குநர் சுனீல் தர்ஷன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

1996ஆம் வெளியான ‘அஜய்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுனீல் தர்ஷன். இப்படத்தைத் தொடர்ந்து ‘ஜான்வர்’, ‘ஏக் ரிஸ்டா’,‘டலாஷ்’, ‘அண்டாஸ்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளது. இயக்கம் தவிர்த்து சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். 2017ஆம் ஆண்டு ‘ஏக் ஹஸீனா தி ஏக் திவானா தா’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இதுவே அவர் இயக்கத்தில் வெளியாக கடைசிப் படமாகும். இப்படத்தில் ஷிவ் தர்ஷன், நடாஷா ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் ‘ஏக் ஹஸீனா தி ஏக் திவானா தா’ படம் யூடியூப் தளத்தில் பலராலும் பதிவேற்றம் செய்யப்பட்டு பல லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. இப்படத்தின் காப்புரிமை தன்னிடம் மட்டுமே இருப்பதாகவும் இதனால் தனக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இயக்குநர் சுனீல் தர்ஷன் தெரிவித்துள்ளார். மேலும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் இன்னும் சில கூகுள் நிர்வாகிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்து சுனீல் தர்ஷன் கூறியுள்ளதாவது:

என்னுடைய ‘ஏக் ஹஸீனா தி ஏக் திவானா தா’ படத்தை நான் யூடியூபில் பதிவேற்றம் செய்யவில்லை. உலகில் இதுவரை யாரிடமும் அப்படத்தை விற்கவுமில்லை. ஆனால் அப்படம் யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பல லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. நான் தொடர்ந்து பலமுறை அப்படத்தை நீக்குமாறு கூகுள் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. இதனால் நான் மிகவும் விரக்தியடைந்தேன். இதனால் எனக்கு நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அதிர்ஷ்டவசமாக நீதிமன்றம் இது தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE