முதல் பார்வை: கார்பன் - நிறைவான கான்செப்ட் சினிமா!

By க.நாகப்பன்

கனவில் நடக்கும் சம்பவங்கள் நிஜத்தில் நடந்தால், அப்பாவுக்கு ஆபத்து வருவதைக் கனவின் வழி அறிந்துகொள்ளும் மகன் அவரைக் காப்பாற்ற நினைத்தால் அதுவே ‘கார்பன்’.

ஐடிஐ படித்துவிட்டு போலீஸ் வேலைக்குத்தான் போவேன் என்று அடம்பிடிக்கிறார் விதார்த். அவரது அப்பா மாரிமுத்து கார்ப்பரேஷனில் குப்பை லாரி ஓட்டுநராகப் பணிபுரிகிறார். கிடைக்கும் பென்ஷன் படத்தில் மகனை போலீஸாக்கி அழகு பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அம்மாவின் மரணத்துக்குப் பிறகு, வேலைக்குப் போய் முதல் மாத சம்பளம் வாங்கிவிட்டுத்தான் அப்பாவிடம் பேசுவேன் என்று சத்தியம் செய்கிறார் விதார்த். இதனால் இருவரும் நேரடியாகப் பேசிக்கொள்ளாமல் வாட்ஸ் அப்பில் பேசிக்கொள்கிறார்கள். தற்காலிகமாக ஒரு கம்பெனியில் வேலைக்குப் போய் முதல் மாத சம்பளம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து உறங்கும்போதுதான் அப்பாவுக்கு விபத்து என்ற கொடுங்கனவு வருகிறது. அலறி எழுந்து அப்பாவைக் காப்பாற்ற ஓடுகிறார். அடிபட்டுக் கிடக்கும் அப்பாவை அணைத்து மருத்துவமனையில் சேர்க்கிறார்.

அப்பாவுக்கு என்ன ஆனது, விபத்துக்கு யார் காரணம், அது விபத்துதானா, அதன் பின்னணி என்ன, அப்பாவைக் காப்பாற்ற முடிந்ததா, விதார்த்தின் போலீஸ் கனவு என்ன ஆனது போன்ற கேள்விக்கு பதில் சொல்கிறது திரைக்கதை.

‘அண்ணாதுரை’ படத்தை இயக்கிய சீனுவாசன் இம்முறை கமர்ஷியல் சினிமாவை நம்பாமல் கான்செப்ட் சினிமாவை நம்பிக் களத்தில் இறங்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

விதார்த்துக்கு இது 25-வது படம். ‘குற்றமே தண்டனை’, ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘குரங்கு பொம்மை’ படங்களுக்குப் பிறகு பேர் சொல்லும்படியான படத்தில் நடித்ததற்காக அவருக்குப் பாராட்டுகள். பாசாங்கு இல்லாத அன்பையும், அப்பாவைக் காப்பாற்றத் துடிக்கும் தவிப்பையும், உண்மையைத் தேடும் படலத்தில் ஓய்வறியா உழைப்பையும் கொடுத்து கவன ஈர்ப்பை ஏற்படுத்துகிறார். போலீஸாக இருக்கும் மூணாறு ரமேஷிடம் அவர் கெஞ்சும்போது பாசமுள்ள மகனின் இயல்பைத் தேர்ந்த நடிப்புடன் வெளிப்படுத்தி முத்திரை பதிக்கிறார். இன்னும் இதுபோன்ற நல்ல படங்களில் விதார்த் வரிசை கட்டி நடிக்கலாம். அவருக்கு வாழ்த்துகள்.

நாயகி தன்யா பாலகிருஷ்ணா கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்துள்ளார். கோபமும், முரட்டுத்தனமும் நிறைந்த எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்த இயக்குநர் மாரிமுத்து, அன்பின் வாஞ்சையுடன் பாசத்தைக் கடத்தி நல்ல தகப்பனுக்கான முன்னுதாரணமாய் பக்குவமான நடிப்பை அளித்து அசத்துகிறார்.

துணைக் கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் நோக்கம் அறிந்து அதை மிகச் சரியாக நிறைவேற்றுகிறார்கள். போலீஸாக மூணாறு ரமேஷ், செக்யூரிட்டியாக மூர்த்தி, வார்டு பாயாக வினோத் சாகர், டாக்டராக வெங்கட் சுபா, இளநீர் வியாபாரியாக விக்ரம் ஜெகதீஷ், பூக்காரப் பெண்ணாக பவுலின், நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நிதீஷ் வீரா, அஜய் நட்ராஜ் ஆகியோர் கச்சிதமான நடிப்பை வழங்கியுள்ளனர்.

தாம்பரம், திருக்கோவிலூரின் சந்து பொந்து, இண்டு இடுக்குகளைக் கூட ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷம் விட்டு வைக்கவில்லை. அந்த அளவுக்கு யதார்த்தம் மீறாமல் காட்சிப்படுத்தியுள்ளார். சாம் சி.எஸ். இசையும், பின்னணியும் படத்துக்கு பலம். பிரவீன் கே.எல். எடிட்டிங்கில் நேர்த்தி தெரிகிறது.

‘மாநாடு’ படத்தின் புகழ் பெற்ற வசனம் ‘வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு’. அதுவே இங்கே கொஞ்சம் மாறி ‘வந்தான் இடிச்சான் போய்ட்டான்’என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘மாநாடு’ படத்தில் தானாக நடக்கும் விஷயங்களைச் சரிசெய்ய சிம்பு போராடுவதைப் போல, இங்கே திட்டமிட்டு நடக்கவைத்து உண்மையைக் கண்டறிய வேண்டிய சூழல் விதார்த்துக்கு. இது திரைக்கதை நகர்த்தலில் சிக்கலான விஷயம். அதில் தன் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி அப்ளாஸ் அள்ளுகிறார் இயக்குநர் சீனுவாசன். மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரியும் பாட்டி, விதார்த்துக்கு அதே கனவு வர கொடுக்கும் ஐடியா சுவாரஸ்யம். போலீஸ் மூளை விதார்த்துக்கு இருப்பதாக எந்த சாகசக் காட்சியும் வலிந்து திணிக்கப்படாததும், நம்பமுடியாத சண்டைக் காட்சியும் இல்லாததும் பெரிய ஆறுதல்.

ஒரே நாளில் எப்படி ஒருவரை நம்புவது, மாரிமுத்து உடன் வேலை செய்த நபர் எங்கு போனார், ஒரு கான்ஸ்டபிள் எல்லாவற்றுக்கும் ஒத்துழைக்க முடியுமா போன்ற ஒருசில லாஜிக் மீறல்கள் உள்ளன. சம்பந்தப்பட்ட நபர் மனம் மாறுவதும் சினிமாத்தனம்தான். ஆனால், அது பெரிய குறையாகத் தெரியவில்லை. இவையெல்லாம் மீச்சிறு குறைகளே. இவற்றையெல்லாம் யோசிக்காத அளவுக்குத் திரைக்கதை கட்டிப்போடுகிறது. தரமான நிறைவான ஒரு கான்செப்ட் படத்தைப் பார்த்த திருப்தி ஏற்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE