பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொண்ட தர்மேந்திரா: அனைவரும் எடுத்துக்கொள்ள வலியுறுத்தல்

By ஏஎன்ஐ

மும்பை: கரோனா பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொண்ட பாலிவுட் நடிகர் தர்மேந்திரா, அனைவரையும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி ஜனவரி 10-ல் தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் பரவலினால் தூண்டப்பட்ட கோவிட்-19 பாதிப்புகளால் உலகம் முழுவதும் புதிய சுகாதார நெருக்கடியைச் சந்திக்கத் தொடங்கியுள்ள வேளையில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இயக்கமும் தொடங்கியுள்ளது.

60 வயதைக் கடந்த இணை நோயுள்ள மூத்த குடிமக்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் செல்லலாம் என்றும், அதற்கு மருத்துவப் பரிந்துரை சான்றிதழ்கள் தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஷோலேவின் மூலம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு அறியப்பட்ட பாலிவுட் நடிகர் 86 வயதான தர்மேந்திரா இன்று கோவிட்-19க்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டார். இவர் தற்போது கரண் ஜோஹரின் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தில் ஆலியா பட், ரன்வீர் சிங், ஷபானா ஆஸ்மி மற்றும் ஜெயா பச்சன் ஆகியோருடன் நடிக்கிறார்.

தர்மேந்திரா, பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளும் வீடியோவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டதோடு, "நண்பர்களே, தயவுசெய்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்" என்றும் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE