'நாய் சேகர்' முதல் 'தேள்' வரை - பொங்கல் ரிலீஸில் நம்பிக்கை தரும் படங்கள் - ஒரு முன்னோட்டப் பார்வை

By மலையரசு

தமிழகத்தில் கரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. அதிகரிக்கும் பரவலால் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அந்த வகையில் தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. இந்த அனுமதியால் அஜித்தின் 'வலிமை', ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்', பிரபாஷின் 'ராதே ஷ்யாம்' போன்ற பெரிய பட்ஜெட் படங்களின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டன. பெரிய படங்கள் ஒதுங்கினாலும் சிறிய பட்ஜெட் படங்கள் இந்த பொங்கலை விழாக்கோலமாக்க உள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தியேட்டர்களில் வெளியாகவுள்ள தமிழ்த் திரைப்படங்கள் குறித்த முன்னோட்டப் பார்வை இது.

கொம்பு வச்ச சிங்கம்டா (ஜனவரி13) : நடிகர் சசிகுமாரின் சினிமா கரியரில் ஒரு நடிகனாக பெரிய வெற்றியை கொடுத்த படம் 'சுந்தரபாண்டியன்'. தமிழகத்தின் கிராம மக்களிடம் நல்ல ரீச்சை பெற்ற இந்தப் படத்தை இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இவர்கள் கூட்டணி பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் படமே 'கொம்பு வச்ச சிங்கம்டா'. சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபஸ்டின் நடித்துள்ளார். அதேபோல் சூரி, மறைந்த இயக்குநர் மகேந்திரன், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தர் குமார் என்பவர் தயாரித்துள்ள இந்தப் படம் கரோனா அச்சுறுத்தலுக்கு முன்பே தயாராகியது. ஓடிடி வெளியீடு அல்லாமல் திரையரங்க வெளியீட்டுக்காகக் காத்திருந்து பல முறை ஒத்திவைக்கப்பட்டு, இறுதியாக பொங்கலுக்கு திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது. சசிகுமாரின் வழக்கமான ஜானரான கிராமத்து பின்னணியே இதிலும். பொங்கல் பண்டிகையை கொண்டாடும் கிராமத்து மக்களின் ரசனைக்கு 'கொம்பு வச்ச சிங்கம்டா' தீனி போடும் வகையில் வெளியாகவுள்ளது.

நாய் சேகர் (ஜனவரி13): இதுவரை காமெடி வேடங்களில் மட்டுமே நடித்து வந்த பிரபல நடிகர் சதீஷ் முதல்முறையாக நாயகனாக நடித்துள்ள படம் 'நாய் சேகர்'. சதீஷ் ஜோடியாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி நடித்துள்ளார். `மெர்சல்' உள்ளிட்ட படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளது. ஒளிப்பதிவாளராக ப்ரவீன், இசையமைப்பாளராக அஜீஷ் அசோக் என்பவர்கள் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்படத்தில் லேப்ரடார் வகை நாய் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகியுள்ள 'நாய் சேகர்' பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் ரசிகர்களை சிரிக்க வைக்கவுள்ளது.

என்ன சொல்ல போகிறாய் (ஜனவரி13): ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. இதில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் நாயகனாக நடித்துள்ளார். அவந்திகா, தேஜு அஸ்வினி, 'குக் வித் கோமாளி' புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார். டிசம்பர் இறுதி வாரமே திரைக்கு வரவிருந்த இந்தப் படம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கதாநாயகன் அஸ்வின் பேசிய தேவையில்லாத பேச்சுக்கள் இதற்கு காரணமாக சொல்லப்பட்டது.

தற்போது சர்ச்சைகள் அனைத்தும் முடிந்த நிலையில் நாளை ரிலீஸாக உள்ளது. 'வலிமை' ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அஜித்குமார் (AK) ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ள நிலையில், அஸ்வின்குமார் ரசிகர்களோ அந்த AK-வுக்கு பதிலாக இந்த AK வருகிறார் என்று வலைதளங்களில் பிரச்சாரம் செய்கின்றனர். இளைஞர்களின் ரசனைக்கு ஏற்பட காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள 'என்ன சொல்ல போகிறாய்' ரசிகர்களை என்ன சொல்ல வைக்க போகிறது என்பது நாளை தெரிந்துவிடும்.

கார்பன் (ஜனவரி13): விதார்த்தின் 25வது படம் இது. இதேபோல் இதுவரை செகெண்ட் ஹீரோயினாக நடித்துவந்த தன்யா பாலகிஷ்ருஷ்ணன் தமிழில் முதல்முறையாக ஹீரோயினாக நடித்திருக்கும் இந்தப் படத்தை விஜய் ஆண்டனி நடித்த `அண்ணாதுரை' படத்தை இயக்கின ஸ்ரீனுவாசன் இயக்கியுள்ளார். படத்தின் போஸ்டர், டிரெய்லர் போன்றவை கவனம் ஈர்த்த நிலையில் நாளை முதல் வெளியாகவுள்ளது.

நாயகன் காண்கின்ற கனவு நிஜத்திலும் நடக்க, அப்படி நாயகன் தனது தந்தையை பற்றி காணும் கனவு நிஜமாகிறது. இதன்பின் என்ன நடக்க போகிறது என்பதை கதைக்களமாக கொண்ட 'கார்பன்' ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கொடுக்கும் என்கிறது படக்குழு.

மருத (ஜனவரி13): ராதிகா சரத்குமார், பருத்திவீரன் சரவணன், விஜி சந்திரசேகர், லவ்லின், வேலா ராமமூர்த்தி, மாரிமுத்து நடிச்சிருக்கும் படம் 'மருத'. மதுரையின் பேச்சு வழக்கு சொல்லான 'மருத' என்பதே படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. படத்துக்கு ஏற்றாற்போல் மதுரையை சுற்றி வசிக்கும் மக்கள் கொண்டாடும் வசந்த விழா என்கிற மொய் விருந்து பற்றி 'மருத' கதைக்களம் பேசுகிறது.

இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் ஜி.ஆர்.எஸ் என்பவரே இயக்கி நாயகனாகவும் நடித்துள்ளார். படத்துக்கு இசை இளையராஜா என்பதும் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு பாடலை இந்தப் பாடலில் பாடியுள்ளார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரதிராஜாவின் 'கிழக்கு சீமையிலே' பாணியிலான 'மருத' அதற்கேற்ற வரவேற்பை பெறுமா என்பது நாளை தெரிந்துவிடும்.

தேள் (ஜனவரி 14): படங்கள் இயக்குவதை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ள நடிகர் பிரபுதேவா தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ‘தூத்துக்குடி’, ‘திருத்தம்’, ‘மதுரை சம்பவம்’, ‘போடிநாயக்கனூர் கணேசன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஹரிகுமார் பிரபுதேவாவை நாயகனாக வைத்து இயக்கியுள்ள படமே 'தேள்'. ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்க சம்யுக்தா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். பிரபுதேவாவின் அம்மாவாக ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார்.

டிசம்பர் 10 அன்றே வெளியாக வேண்டிய 'தேள்' பல்வேறு காரணங்களால் தாமதமானது. இப்போது பொங்கல் வெளியீட்டில் பெரிய படங்கள் பின்வாங்க, 'தேள்' நாளை மறுநாள் முதல் ரசிகர்களை சந்திக்க இருக்கிறது. விண்டேஜ் பிரபுதேவா இந்தப் படத்தின் மூலமாக திரும்ப பார்க்கலாம் என நினைத்தால், பிரபுதேவாவுக்கு இதில் நடனகாட்சியே கிடையாதாம். மேலும், மிக முக்கியமான விஷயத்தை பேசும் அழுத்தமான படைப்பாக 'தேள்' இருக்கும் என பிரபு பேசியுள்ளார்.

ஏஜிபி (AGP) (ஜனவரி 14): தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்த லஷ்மிமேனன் லீட் ரோலில் நடித்திருக்கும் படமே இது. ரமேஷ் சுப்பிரமணியன் என்பவர் இயக்கியுள்ள இப்படம் தமிழ் சினிமாவின் முதல் female schizophrenia படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது. அன்றாட நிகழ்வில் நடப்பது எல்லாம் நிஜாமா இல்லை கற்பனை என்று தெரியாமல் குழம்பும் பாதிப்புக்கு பெயர் தான் schizophrenia. சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள 'ஏஜிபி' நாளை மறுநாள் முதல் வெளியாகவுள்ளது.

இவை தவிர, 'பாசக்கார பாய' என்ற படமும் தியேட்டரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆந்தாலஜி படமான 'புத்தம் புது காலை விடியாதா' போன்ற சில படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE