நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கரோனா தொற்று உறுதி

By செய்திப்பிரிவு

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் தற்போது 3-வது அலை தொடங்கிவிட்டதால், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கரோனா வைரஸின் உருமாற்ற டெல்டா வைரஸ் பரவுவதோடு, தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவலும் அதிகரித்து வருகிறது.

திரையுலக பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், சத்யராஜ், நடிகைகள் த்ரிஷா, குஷ்பு, மீனா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்த போதிலும், லேசான அறிகுறிகளுடன் எனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது வைரஸ் பரவும் வேகம் தொடர்பான பயமுறுத்தும் ஒரு நினைவூட்டல். அனைத்து கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி பாதுகாப்பாக இருக்கவும். தற்போது நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தயவுசெய்து பரிசோதனை செய்துகொள்ளவும்.

நீங்கள் இன்னும் தடுப்பூசி போடவில்லை என்றால் தீவிரமான கரோனா அறிகுறிகளைத் தவிர்க்கவும், உங்களுடைய நலனுக்காகவும் உங்கள் அன்புக்குரியவர்களின் ஆரோக்கியத்திற்காகவும், தயவுசெய்து தடுப்பூசிகளை விரைவாக போட்டுக் கொள்ளுங்கள். விரைவில் இதிலிருந்து குணமடைந்து மீண்டும் செயல்படத் தொடங்குவேன் என்று நம்புகிறேன்.

இவ்வாறு கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE