'இந்தப் போராட்டத்தில் நான் தனியாக இல்லை': திலீப் வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை

By செய்திப்பிரிவு

நடிகர் திலீப் வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை முதல்முறையாக பொதுவெளியில் பேசியுள்ளார். தன்னுடைய போராட்டத்தில் துணை நிற்பவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை கடந்த 2017-ல் படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் செல்லும்போது கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளானார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தை செய்த நடிகையின் கார் டிரைவர் பல்சர் சுனி என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை முதல்முறையாக பொதுவெளியில் இதைப் பற்றி பேசியிருக்கிறார். வழக்கில் சமீபத்தில் நடந்துவரும் நகர்வுகள் மக்களின் கவனத்தை பெற்றுவரும் சூழலில், தனது சமூக வலைதளம் மூலமாக பாதிக்கப்பட்ட நடிகை தெரிவித்துள்ளதில், "இது எளிதான பயணம் அல்ல என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஐந்து ஆண்டுகளாக, என் பெயரும் எனது அடையாளமும் எனக்கு இழைக்கப்பட்ட கொடூர தாக்குதலின் பாரத்தால் அடக்கப்பட்டுள்ளது.

நான் குற்றம் செய்யவில்லை என்றாலும், என்னை அவமானப்படுத்தவும், அமைதியாக்கவும், தனிமைப்படுத்தவும் பல முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் அப்படிப்பட்ட சமயங்களில் என் குரலை உயிர்ப்புடன் வைத்திருக்க சிலர் முன்வந்திருக்கிறார்கள். இப்போது எனக்காகப் பல குரல்கள் பேசுவதைக் கேட்கும்போது, ​​நீதிக்கான இந்தப் போராட்டத்தில் நான் தனியாக இல்லை என்பது எனக்கு தெரிகிறது. நீதி நிலைபெறவும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவும், இனி யாரும் இதுபோன்ற சோதனைக்கு ஆளாகாமல் இருக்கவும், இந்தப் பயணத்தை உறுதியுடனும் உயிர்ப்புடனும் தொடர்வேன். என்னுடன் நிற்கும் அனைவருக்கும், உங்கள் அன்புக்கும் மனமார்ந்த நன்றிகள்" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக இந்த வழக்கு கேரளாவில் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலீப் தொடர்பாக நிறைய குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் வெளிவருகிறது. இந்தநிலையில் தான் பாதிக்கப்பட்ட பெண்ணின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது. இதனிடையே, நடிகர் திலீப் இந்த வழக்கையொட்டி தன் மீது பதியப்பட்ட புதிய வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE