- கே.பாக்யராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல்
சினிமாவில் கதை சொல்லுவது என்பது தனி கலை. அப்படியான கதைசொல்லிகள், சொல்லுகிற உத்திகளால், நம்மை அப்படியே கட்டிப்போட்டுவிடுவார்கள். அப்படியே நம்மைக் கட்டிப்போடுகிற வித்தைதான் திரைக்கதை. கதையானது மிகமிகச் சாதாரணமானதாகக் கூட இருக்கலாம். ஆனால் சொல்லுகிற விதத்தில்தான் அதன் சுவாரஸ்யமும் வெற்றியும் அடங்கியிருக்கிறது. இந்தியத் திரையுலகிலேயே, கதை சொல்லிகளில், தனித்துவம் வாய்ந்தவர், ரசிகர்களைக் கட்டிப்பொடுகிற வித்தையைக் கொண்டவர், திரைக்கதை ஜாலம் அறிந்தவர், திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர், திரைக்கதை மன்னன் என்றெல்லாம் பேரும்புகழும் கொண்டவர் கே.பாக்யராஜ். இந்த யுக்திகளில் வல்லவர் என்பதால்தான் எல்லோரும் பாக்யராஜைக் கொண்டாடுகிறார்கள். ‘நம்ம ஆளு’ என்று போற்றிப் புகழுகிறார்கள்.
ஒவ்வொரு இயக்குநரும் பட்டறைக்குச் சொந்தக்காரர்கள். சினிமாப் பாசறையை கட்டமைத்துக்கொண்டவர்கள். இந்தப் பட்டறைகளில் இருந்து தொழில் கற்றுக் கொண்டு, தனியே கடை வைத்தவர்கள், கதை பரிமாறியவர்கள் ஆயிரமாயிரம். அப்படிப் பார்த்தால், தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தி சினிமா உலகுகளைக் கணக்கிட்டுப் பார்த்தால், கே.பாக்யராஜின் பட்டறையில் இருந்தும், பாசறையில் இருந்தும் தேர்ந்த தொழிலுடன் வந்து கொடிநாட்டியவர்களே அதிகம்.
கோவையில் இருந்து ஆசைகளும் ஏக்கங்களுமாய் சினிமா உலகில் தடம் பதிக்க வந்த பாக்யராஜுக்கு, இன்றைக்கு அவர் எங்கு சென்றாலும் சிகப்புக்கம்பள வரவேற்பு அமர்க்களப்படுகிறது. ஆனால், அப்போது வந்த தருணத்தில், வானில் இருந்து தேவர்கள் பூமாரியெல்லாம் பொழியவில்லை. அத்தனை கஷ்டநஷ்டங்களையும் மான அவமானங்களையும் வலிவேதனைகளையும் கடந்த பொழுதுகள்தான் அதிகம்.
குருவை மறந்தவர்கள், செழித்து ஜெயித்ததாக, ஜெயித்துச் செழித்ததாக சரித்திரமே இல்லை. இன்றைக்கு மிகப்பெரிய உச்சம் தொட்ட நிலையில் இருக்கிற கே.பாக்யராஜ், இந்த நிமிடம் வரை, குருமரியாதையுடன், அதே சிஷ்ய உணர்வுடன் அவர்களைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார். குருவைப் போற்றிக் கொண்டே இருக்கிறார். இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வந்த, பத்தரை மாத்து சொக்கத்தங்கமென ஜொலித்துக்கொண்டிருக்கிறார் பாக்யராஜ்.
பாரதிராஜாவின் 16 வயதினிலே, அவருக்கான புதிய வாசலோ, வாழ்க்கையோ மட்டுமே இல்லை. தமிழ் சினிமாவுக்கான புதிய வாசலாக, புதியதொரு உதயமாக, அற்புதமானதொரு விடியலாக அமைந்தது. அதனால்தான், அந்தப் படத்தில் பணியாற்றிய அத்தனைபேரும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
16 வயதினிலே, பாரதிராஜாவுக்கு முதல்படம். இளையராஜா பாடிய முதல்படம். மலேசியா வாசுதேவனுக்கு மிகப்பெரிய ஹிட்டைக் கொடுத்த பாடலைத் தந்த படம். ஒளிப்பதிவாளர் நிவாஸின் ஒளி ஓவியங்களை, உலகுக்கு உணர்த்திய படம். ஸ்ரீதேவியின் உறுத்தாத அழகை, அழகாய் காட்டிய படம். ரஜினி பேசிய பஞ்ச் வசனம் இடம் பெற்ற முதல் படம். டைமிங்ரைமிங் சொல்லி, கவுண்ட்டிங் கொடுக்கும் கவுண்டமணியின் முத்திரைக்கான படம். தேர்ந்த நடிகனாக கமலை வெளிக்காட்டிய படம். கே.பாக்யராஜை, கோவை டூ கோடம்பாக்கத்துக்கும், கோடம்பாக்கம் டூ ரசிகர்களின் மனங்களுக்கும் என கைப்பிடித்து, அழைத்துக் கொண்டு வந்து சேர்த்த படம்.
பிறகு, சில படங்களுக்குப் பிறகு, தானே இயக்குவது என உறுதியானார் பாக்யராஜ். இயக்குவதை குறிக்கோளாகக் கொண்டிருந்த பாக்யராஜ், தன் முதல் படமான சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தில், இரண்டாம் நாயகனாக நடிக்கவேண்டியதாயிற்று. அதேபோல், குருநாதரின் இயக்கத்தில் புதிய வார்ப்புகள் படத்தில் நாயகனாகவும் அறிமுகமானார். இது இன்னொரு வெளிச்சம். இன்னொரு வாசல். இன்னொரு பாய்ச்சல்.
அநேகமாக, தன்னுடைய பலம் என்னவோ அதைக் கொண்டே வெற்றிகாண்பதுதான் ஜெயிப்பதற்கான லட்சணம், வழி. ஆனால், தன்னுடைய இரண்டு மைனஸ்களையே பிளஸ்ஸாக்கிக் கொண்டு, ஜெயித்தவர் பாக்யராஜாகத்தான் இருக்கமுடியும். தன் கீச்சுக்குரலையும் கண்ணாடியையும் தன் கதைக்கு வெகுவாகப் பயன்படுத்தி வெற்றி அடைந்தார். அல்லது அந்தக் கண்ணாடியையும் குரலையுமே ரகசிய கேரக்டர்களாக வடிவமைத்தார் என்று இப்படியும் சொல்லலாம்.
அதுமட்டுமா?
நாம் எல்லோருமே செண்டிமெண்டுகளால் நிரம்பியவர்கள். அதிலும் சினிமாவுக்குள் தும்மினால், இருமினால் என செண்டிமென்டுகளால் கட்டமைக்கப்பட்ட உலகம். ஆனால் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவோ, அல்லது வெகு முக்கியமானதாகவோ எடுத்துக்கொள்ளவில்லை பாக்யராஜ்.
படத்தின் முதல் காட்சியைக் கூட செண்டிமெண்டாகவும், பாஸிட்டீவாகவும் படமாக்குகிற வேளையில், படத்தின் டைட்டிலில் சமரசமே செய்துகொள்ளவில்லை. சுவர் இல்லாத சித்திரங்கள் என்றொரு நெகட்டீவ் டைட்டில் வைத்தார். அடுத்து, ஒரு கை ஓசை என்றொரு டைட்டில். அதுவும் நெகட்டீவ். இதன் பிறகு மெளன கீதங்கள். சரி… அடுத்து என்னடாவெனப் பார்த்தால், இன்று போய் நாளை வா என்றார். போகட்டும், அடுத்தாப்ல என்ன என்று கவனித்தால், விடியும் வரை காத்திரு என்றார். இப்படி நெகட்டீவ் டைட்டில்கள் பற்றி அலட்டிக்கொள்ளவோ, குழம்பிக்கொள்ளவோ இல்லை. அவற்றுக்குக் காரணம்… பாக்யராஜுக்குள் இருந்த, இப்போதும் இருக்கிற பாஸிடீவ் எனர்ஜி .
‘சரோசா… குப்பை கொட்றியா கொட்டு கொட்டு’ என்பது இன்றைக்கும் மனங்களில், சிந்தாமல் சிதறாமல் இருக்கிறது. ‘காதல் வைபோகமே’ பாட்டு இப்போது கேட்டாலும் புதியதொரு வைபவம்தான் நமக்கு!
ஒருகை ஓசையின் ‘வாத்து மடையன்’ காமெடியும் வாத்து மடையன் வார்த்தையும் பாக்யராஜால்தான் பிரபலம். முருகன், சங்கிலி முருகனாக இன்றைக்கும் வலுவாக இருப்பதற்கும் ஒரு கை ஓசையே சத்தமிட்டு, அவரை வெளிக்காட்டியதுதான்.
மெளன கீதங்கள் ரகுவையும் சுகுணாவையும் மறக்கவே முடியாது. மூன்றாவது படமான இதில், மொத்தப் பாய்ச்சலையும் காட்டி, கதை சொல்லுவதில் வித்தை காட்டியிருப்பார் பாக்யராஜ். இன்றைக்கு கதையை மூடி மூடி வைத்துக்கொண்டுதான் படம் ரிலீஸ் பண்ணுகிறார்கள். கதையே இல்லாவிட்டாலும் கதை இருப்பது போல், பாவ்லா பண்ணி, ப்ரமோட் பண்ணுகிற நிலை. ஆனால், பிரபலமான வாரப் பத்திரிகையில், மெளன கீதங்கள் படத்தின் கதையையும், காட்சிகளையும் வசனங்களையும் வாராவாரம் வரச் செய்தார் பாக்யராஜ். ‘இதோ… என் உள்ளங்கைல வைச்சிருக்கறது இதுதான்’ என்று கார்டுகளையெல்லாம் மொத்தமாகக் காட்டினார்.
அட… அதான் படிச்சாச்சே… அப்புறம் எதுக்கு படம் பாக்கணும் என்று ரசிகர்கள் நினைக்கவில்லை. படிச்சதே இவ்ளோ சுவாரஸ்யம்னா, அதைப் படமா இந்த ஆளு என்னவெல்லாம் பண்ணிருப்பார் என்று படையெனத் திரண்டு வந்தார்கள் ரசிகர்கள். வாசகர்களை ரசிகர்களாக்கினார். ரசிகர்களை வாசிப்புக்குள் நகர்த்தினார். ஒரு ஷோவில் படம் பார்த்த ரசிகர்களை விட, ஹவுஸ்புல் பார்த்துவிட்டு, ஏக்கத்துடன் திரும்பிச் சென்றவர்கள் மூன்று மடங்கு. உள்ளேயும் வெளியேயுமாக இருந்தவர்களில் பலரும், மூன்று நான்கு முறை பார்த்தவர்கள். குடும்பத்தோடு வந்து பார்த்தார்கள். பெண்களிடம் தனியிடம் பிடித்தார் பாக்யராஜ். இதுவரை பெண்களிடம், அப்படியொரு இடத்தையும் எவரும் பிடிக்கவில்லை. அவரின் இடத்துக்கும் எவரும் வரவில்லை.
ஹீரோயிஸம் என்பதே பில்டப்புகளால் கட்டமைக்கப்பட்ட பில்டிங் என்பார்கள். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத பாக்யராஜ், தன்னைத் தாழ்த்திக் கொண்டார். உயர்ந்து நின்றார். தன்னைத் தானே கேலி பேசிக்கொண்டார். படத்தில் வருகிற ஏனைய கேரக்டர்கள் அவரை கலாய்த்துத் தள்ளுவார்கள். ஆனால் தன் ‘திருட்டு முழி’யால் அப்ளாஸ் அள்ளிவிடுவதுதான் பாக்யராஜ தந்திரம்.
‘மெளன கீதங்கள்’ ரகுவை எல்லோருமே ரசித்தார்கள். மிடில்கிளாஸ் கணவன்மார்களின் உணர்வை அப்படியே பிரதிபலித்திருந்தார். அந்த ரகுவை, பாக்யராஜை பெண்களுக்கும் பிடித்துப் போனது. ‘இன்று போய் நாளை வா’ படத்தின் மூன்று நண்பர்கள் கான்செப்ட்… இன்றைக்கு சகஜம். அன்றைக்கு புதுசு. ஒரே பெண்ணை மூன்று ஆண்கள் காதலிப்பதை நகைச்சுவையாக மட்டுமே சொல்ல, பாக்யராஜ் எனும் ’கதைசொல்லி’யாக மட்டுமே சாத்தியம். சொத்துக்கு ஆசைப்பட்டு மனைவியையே கொலை செய்யத் திட்டமிடும் ‘விடியும் வரை காத்திரு’, ‘என் காதலி உங்களுக்கு மனைவியாகலாம், உங்க மனைவி எனக்கு காதலியாக முடியாது’ என்று சொன்ன ‘பாலக்காட்டு மாதவன்’ என இவரின் படங்களையும் இவரையும் ஆண் பெண் பாகுபாடில்லாமல் எல்லோரும் கொண்டாடினார்கள்.
நம்பியாரை அவரே பார்த்திடாத கோணத்தில் புதுப்பரிமாணம் காட்டினார். இவர் அறிமுகப்படுத்திய ’முந்தானை முடிச்சு’ ஊர்வசியும் ‘தூறல்நின்னு போச்சு’ சுலக்ஷணாவும் இன்றைக்கும் நடிப்பில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். கல்லாபெட்டி சிங்காரத்துக்கு அப்படியொரு வாய்ப்பு, சூரியகாந்துக்கு இப்படியொரு சான்ஸ், கே.கே.செளந்தருக்கு, ஜெய்கணேஷுக்கு, சோமயாஜுலுவுக்கு, கல்யாண்குமாருக்கு, குலதெய்வம் ராஜகோபாலுக்கு, ஜூனியர் பாலையாவுக்கு என பலருக்கும் பளிச்சென்றும் பச்சக்கென்றுமாக பாக்யராஜ் கொடுத்த கதாபாத்திரங்கள், தனித்துவம் மிக்கவை!
‘அம்பிகாவும் பாக்யராஜும் சேரணுமே என தவிக்கவிடுவார். ஆனால் இந்த க்ளைமாக்ஸ்தான் சரி என்று ஆடியன்ஸ் தெளிந்த மனதுடன் வெளியே வருவார்கள். ‘என்னப்பா இது… குழந்தையைத் தாண்டி பொய் சத்தியம் பண்றாளே’ என்று கோபமாவார்கள். அதேசமயம், ‘பாவம்பா இந்தப் பொண்ணு, இவளை மன்னிச்சு சேர்த்துக்கணுமே…’ என்று குலசாமியிடம் வேண்டுவார்கள். அதுதான் பாக்யராஜின் கதை சொல்லும் பாணிக்கு கிடைத்த பாய்ச்சல் வெற்றி! குருநாதர் பாரதிராஜா ‘வேதம் புதிது’, காரம் தூவி எடுத்தார். ‘இது நம்ம ஆளு’ என்று தன் ரூட்டிலேயே காமெடி அதகளம் பண்ணி, பொளேர் பாடம் நடத்தினார்.
’சிகப்பு ரோஜாக்கள்’ மாதிரியும் கதை பண்ணுவார். கொலையாளி அப்பாவைப் பிடிக்கப் போராடும் போலீஸ் மகனைக் கொண்டும் கதையாக்குவார். இங்கே, கமலுக்கும் ஹிட் கொடுப்பார். அமிதாப்புக்கே பிரமாண்ட வெற்றி கொடுத்தாலும் அதை ‘டைரக்டர் படம்’ என்று பேர் வாங்குவார். மாஸ் ஹீரோ ரஜினியே ராபின்ஹுட்டாக நடித்த போதும், படத்தில் அதிக கைத்தட்டல் வாங்கியவர் சின்னசேலம் சிங்காரம் பாக்யராஜ் தான். அந்தக் கேரக்டரை வேறு எவரேனும் செய்திருந்தால், இத்தனை ஜொலிப்பும் கலகலப்பும் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை.
இன்றைக்கு உள்ள இளம் ரசிகர்களுக்கு பாக்யராஜ் என்பவர் நடிகர். இருபது முப்பது வருட ரசிகர்களுக்கு அவர் சிறந்த இயக்குநர். அதுமட்டுமா? ஆகச்சிறந்த கதைசொல்லி. திரைக்கதை ராஜா.
மூன்று மாதம் கதைக்கு யோசித்து ஆறு மாதம் திரைக்கதைக்கு யோசித்து இரண்டு மாதங்களில் படமெடுக்கும் பாக்யராஜ் எனும் திரைக்கதை மன்னனின் இடம் இன்றைக்கும் காலியாகவே!
டைரக்டரே நடிகராக, நடிகரே வசனகர்த்தாவாக, வசனகர்த்தாவே தயாரிப்பாளராக… இசையமைப்பாளராக முக்கியமாக மூக்குக்கண்ணாடி போட்ட ஹீரோவாக ஜொலித்ததும் ஜெயித்ததும் பாக்யராஜாகத்தான் இருக்கும்.
- ஜனவரி 7 கே.பாக்யராஜ் பிறந்தநாள்
- திரைக்கதை ராஜா பாக்யராஜை வாழ்த்துவோம்!
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago