ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர், வேறு சில சூழல்கள் காரணமாக கிரிக்கெட் கனவை துறக்கும் நிலைக்கு ஆளாகும்போது காலம் கொடுத்த பரிசு, நடிப்பு. அன்று விதிவிட்ட வழியில் நடிப்புக்கான படிப்பைத் தொடர்ந்தபோது அந்த வீரர் 'இந்தியா கொண்டாடும் நடிகராகப் போகிறோம்' என நினைத்திருக்க மாட்டார். ஆனால், அது நடந்தது. ஆம், நாம் பேசுவது, 20 ஆண்டுகளாக சினிமா ரசிகர்களை மகிழ்வித்த கலைஞன் மறைந்த இர்ஃபான் கானைப் பற்றிதான்.
இர்ஃபான் கான் மறையும் முன்புவரை அவரைப் பற்றி தெரியாது. இத்தனைக்கும் ஆஸ்கர் புகழ் காரணமாக 'ஸ்லம்டாக் மில்லியனர்' மற்றும் `ஜுராசிக் பார்க்' போன்ற அவரின் சில படங்கள் ஏற்கெனவே பார்த்திருந்தாலும் இர்ஃபான் என் மனதுக்கு அவ்வளவு நெருக்கமாகவில்லை. இறப்புக்கு பின் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள நேர்ந்ததால் அவரின் படங்களை பார்க்க முடிவு செய்தேன். அதற்காக நான் முதலில் தேர்வு செய்த படம் 'தி லஞ்ச்பாக்ஸ்'. இதை தேர்வு செய்ய காரணம் உண்டு.
புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் தனது Interstellar படத்தில் நடிக்க அழைத்தும், 'தி லஞ்ச்பாக்ஸ்' படத்தில் நடிப்பதற்காக அதனை இர்ஃபான் மறுத்தார் என்று அவர் இறந்தபோது நண்பர்கள் நிறைய பேர் பதிவிட்டிருந்தை கண்டு ஆர்வம் எழ, அதைப் பார்க்க முடிவு செய்தேன். அப்படி பார்த்த லஞ்ச்பாக்ஸ் படத்தின் முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை இர்ஃபான் என்னும் உன்னத கலைஞரின் நடிப்பு முழுமையாக என்னை ஆட்கொண்டுவிட்டது.
» 'மனிதனாயிரு' இன்னும் என் நெஞ்சில் நிழலாடுகிறது - கவிஞர் காமகோடியானுக்கு இளையராஜா புகழஞ்சலி
» "ஜூலன்... வியத்தகு வாழ்வனுபவம்" - அடுத்த இன்னிங்ஸில் களமிறங்கிய அனுஷ்கா சர்மா
தவறுதலாக செல்லும் ஒரு லஞ்ச்பாக்ஸ் மூலமாக சாஜன் ஃபெர்னாண்டஸ் - இலா என இரு நபர்களுக்கு இடையிலான அன்பு, ஏக்கம், வலி, தனிமை, காதல், எதிர்பார்ப்பு என உணர்வுகளைச் சொல்லும் கதை அது. இதில் உணர்வுகள் நிறைந்ததுதான் மனிதனின் வாழ்க்கை என்பதை வசனங்கள் அதிகம் இல்லாமல், உணர்வுகளால் வெளிக்காட்டியிருப்பார் இர்ஃபான்.
இந்தப் படத்துக்கு பின் இர்ஃபானின் படங்களை தேடிச் சென்று பார்த்தேன். அதில் முக்கியமானது இர்ஃபான் புற்றுநோயால் அவதிப்பட்டபோது நடித்த 'கர்வான்'. எதிர்பாராத பயணங்களும், அதில் சந்திக்கும் மனிதர்களும் நடக்கும் சம்பவங்களும்தான் கதை. பயணங்களைப் பற்றிய படம் என்றாலே ஒரு ஃபீல் குட் டச் இருக்கும். இந்தப் படத்தில் அதை இன்னும் அழகாக்கி இருப்பார் இர்ஃபான். இது மலையாள நடிகர் துல்கர் சல்மானின் முதல் இந்திப் படம். இதில் அப்பாவின் இறப்பு குறித்த எந்த ரியாக்ஷனும் காட்டாத அவினாஷ் என்கிற இளைஞர் வேடத்தில் துல்கர் நடித்திருப்பார். என்றாலும், மெக்கானிக் ஷெளகத் கதாபாத்திரத்தின் வாயிலாக 'கர்வான்' படத்தை முழுவதுமாக தனது தோளில் சுமந்தவர் இர்ஃபான்தான்.
கரிப் கரிப் சிங்கிள் (Qarib Qarib Singlle): இதுவும் பயணத்தை மையப்படுத்திய கதைதான். நேரெதிர் குணாதிசயம் கொண்ட இருவர் எதிர்பாராத விதமாக இணைந்து பயணமாவதுதான் கதையின் மையக்கரு. படம் கதை, காட்சியமைப்பு பாலிவுட் பார்த்து சலித்துவிட்டது என்றாலும், நடிகை பார்வதி திருவொத்துவை கவர இர்ஃபான் செய்யும் செயல்கள் பார்வையாளர்களை ரசிக்க வைக்கும்படியாக இருக்கும்.
பாலிவுட் என்றாலே வசீகரத் தோற்றம் கொண்ட நாயகர்கள் இருப்பார்கள் என்ற பிம்பத்தை உடைத்தவர் இர்ஃபான். அவரின் யதார்த்தமான நடிப்புதான் அவரை ரசிகனிடம் கொண்டுபோய் சேர்த்தது. வசன உச்சரிப்பில் தனித்தன்மை கொண்டவர். வசனமே இல்லை என்றாலும் கண்களால் காட்சியின் உணர்ச்சிகளைப் பார்வையாளனுக்கு கடத்தும் அசாத்திய கலைஞன். இதற்கு சாட்சிதான் 'தி வாரியர்' தொடங்கி 'ராக்', மெட்ரோ', 'பான் சிங் டோமர்', 'டி-டே', 'ஸ்லம்டாக் மில்லினியர்', 'லைஃப் ஆஃப் பை', 'இந்தி மீடியம்' போன்ற படங்கள்.
பிறப்பிலேயே செல்வந்தர் வீட்டு பையன் இர்ஃபான். அந்த செல்வமே அவரின் கிரிக்கெட் மற்றும் சினிமா கனவுக்கு தடையாக இருந்தது. அதை உடைத்து தனது திறமையாலும், பொறுமையாலும் உச்சத்தைத் தொட்டார். கிட்டத்தட்ட இந்தியாவுக்கும் ஹாலிவுட்டுக்குமான இடையேயான உறவை வலுப்படுத்தியதில் இர்ஃபானுக்கு முக்கியப் பங்கு உண்டு.
இர்ஃபானின் பல இந்தி திரைப்படங்கள் அமெரிக்காவில் திரையிடாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஹாலிவுட்டின் பிளாக்பஸ்டர் படங்களான 'லைஃப் ஆஃப் பை', 'தி அமேஸிங் ஸ்பைடர்மேன்', 'இன்ஃபெர்னோ', 'ஜுராசிக் வேர்ல்டு' போன்ற படங்கள் மூலமாக அவரின் திறமை உலகறியப்பட்டது. தான் ஏற்கும் பாத்திரம் வங்காளியாக, பாகிஸ்தானியாக என எதுவாக இருந்தாலும் அதை யதார்த்தமான நடிப்பால் தத்ரூபமாய் கொடுக்கும் நல்ல நடிகன். இதனால்தான் ஹாலிவுட் கடைசிவரை இர்ஃபானின் கால்ஷீட்டுக்கு காத்துக்கிடந்தது. இப்போது எவ்வளவு காத்திருந்தாலும் கிட்டாதவராகிவிட்டார்.
இர்ஃபான் கான் மறைந்தபோது ஃபகத் ஃபாசில் எழுதிய இரங்கற்பாவை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்:
"பல வருடங்களுக்கு முன்பு, என்னால் எந்த வருடமென்று சரியாக சொல்ல முடியவில்லை. அமெரிக்காவில் நான் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் நடந்தது. நான் கல்லூரி வளாகத்தில் தங்கியிருந்தேன். அங்கு இந்தியப் படங்களே பார்க்க முடியாது. அதனால், நானும் எனது நண்பன் நிகுஞ்ச் என்பவரும், எங்கள் வளாகத்துக்குப் பக்கத்தில் காலதி பாய் என்ற பாகிஸ்தான்காரர் மளிகைக் கடை வைத்திருந்தார். அங்கு சென்று வார இறுதியில் பார்க்க டிவிடியை வாடகைக்கு எடுப்போம்.
அப்படி ஒரு முறை அங்கு சென்ற போது, காலித் பாய், 'யு ஹோயா தோ க்யா ஹோதா' (Yun Hota Toh Kya Hota) என்ற படத்தைப் பரிந்துரைத்தார். அந்தப் படத்தின் இயக்குநர் நசீருதின் ஷா என்பதைத்தான் நான் முதலில் கவனித்தேன். வார இறுதியில் பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன். அன்றிரவு, படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் சலீம் ராஜபலி என்ற கதாபாத்திரம் திரையில் வந்தபோது, நிகுஞ்சிடம் 'யார் இந்த ஆள்?' என்று கேட்டேன்.
சில நடிகர்கள் தீவிரமாக நடிப்பார்கள், சிலர் ஸ்டைலாகவும், கவர்ச்சிகரமாகவும் இருப்பார்கள். ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், திரையில் அசலாகத் தெரிந்த நடிகரை நான் அப்போதுதான் முதல் முறை பார்த்தேன். அவரது பெயர் இர்ஃபான் கான்.
எனது திரை வாழ்க்கைக்கு இர்ஃபான் கானுக்கு நான் கடன்பட்டதாக உணர்கிறேன். அன்று நான் அந்த டிவிடியை எடுக்கவில்லை என்றால், அந்த நடிகர் என் வாழ்வை மாற்றவில்லையென்றால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன்" என்று உணர்வுபூர்வமாக பதிவு செய்தார் ஃபகத் ஃபாசில்.
ஆம்... இந்தியாவின் இளம் நடிப்பு அசுரன்கள் ஃபகத் ஃபாசில், தனுஷ் போன்றோரின் ஆதர்ச நாயகனான இர்ஃபான், இறந்த பின்பும் தனது அசாத்திய நடிப்பால் சினிமா ஆர்வலர்களுக்கு திகட்டாத திரை விருந்து படைத்துக் கொண்டே இருக்கிறார்.
| ஜன.7 - இன்று இர்ஃபான் கான் பிறந்தநாள் |
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago