அனைத்து மொழிகளுக்கான 'மாநாடு' ரீமேக் உரிமையை வசப்படுத்திய முன்னணி நிறுவனம்

By செய்திப்பிரிவு

‘மாநாடு’ படத்தின் அனைத்து மொழிகளுக்கான ரீமேக் உரிமையை சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் கைப்பற்றியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படம் கடந்த நவ.25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பலரும் படக்குழுவை பாராட்டி வந்தனர்.

‘மாநாடு’ படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற இந்தி, தெலுங்கு தயாரிப்பாளர்கள் ஆர்வமுடன் முன்வந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. எனினும் படக்குழு தரப்பில் இருந்து இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகம் இருந்து வந்தது.

இந்நிலையில் ‘மாநாடு’ படத்தின் அனைத்து மொழிகளுக்கான ரீமேக் உரிமையை தெலுங்குத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் கைப்பற்றியுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும் ‘மாநாடு’ படத்தில் தெலுங்கு டப்பிங் உரிமையையும் அந்நிறுவனமே கைப்பற்றியுள்ளது.

1964 முதல் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இதுவரை 100-க்கும் அதிகமான திரைப்படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE