ஒவ்வொரு சண்டைக் காட்சிக்கும் ஒரு வாரம் முன்பே பயிற்சி செய்வார் பாலகிருஷ்ணா: ஸ்டன் சிவா

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு சண்டைக் காட்சிக்கும் குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பே பயிற்சி செய்வார் நடிகர் பாலகிருஷ்ணா என பிரபல ஸ்டண்ட் கலைஞர் ஸ்டன் சிவா தெரிவித்துள்ளார்.

போயபதி சீனு இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த படம் ‘அகண்டா’. இதில் ப்ரக்யா ஜைஸ்வால், ஜெகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார். இப்படம் கடந்த டிச.2 அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வந்தனர். இப்படத்தில் ஸ்டன் சிவா சண்டைப் பயிற்சி அளித்திருந்தார். ஸ்டன் சிவா ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘வேட்டையாடு விளையாடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டன் சிவா பேசியதாவது:

'' ‘அகண்டா’ எனக்கு பாலகிருஷ்ணாவுடன் மூன்றாவது படம். முதல் படம் ‘லட்சுமி நரசிம்மன்’. இரண்டாவது படம் ‘சிம்ஹா’. மூன்றாவது படம் ‘அகண்டா’. மூன்று படங்களுமே வெற்றிப் படங்கள்தான். அதிலும் சமீபத்தில் ‘அகண்டா’ மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் இயக்குநர் போயபதி ஶ்ரீனுதான் எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்தார். இப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமே 85 நாட்கள் படமாக்கப்பட்டன. இதற்கு எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது எனது இரு மகன்கள் கெவின் குமார் மற்றும் ஸ்டீவன் குமார்தான். ஆக்‌ஷனுக்காகவே இப்படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பாலகிருஷ்ணா நடித்த அனைத்துப் படங்களும் மாஸாக இருக்கும். இந்தப் படத்தில் கதைக்கு ஒத்துப்போகும்படியான சண்டைக் காட்சியையும், மாஸுடன் கிளாஸையும் இணைக்கும் வகையில் இயக்கியுள்ளேன். வேறுபட்ட மொழிகளில் இயக்குவதற்கு ஏற்ற மனநிலை மற்றும் சினிமா மீதான புரிதல் வேண்டும்.

இன்று திரையுலகில் பல பிரபலங்கள் என்னை அழைத்து இந்தியத் திரையுலகில் இதுபோன்ற சண்டைக்காட்சியை யாரும் கண்டதில்லை எனப் பாராட்டி வருகின்றனர். நடிகர் பாலகிருஷ்ணா பயம் அறியாத ஒரு ஆக்‌ஷன் ஹீரோ. இதுவரை அவர் செய்யாத அளவிற்கு புதுமையாக இருக்கவேண்டும் என்பதற்கு மிகவும் கடினமாக உழைத்தோம். ஒவ்வொரு சண்டைக் காட்சிக்கும் குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பே பயிற்சி செய்வார் நடிகர் பாலகிருஷ்ணா''.

இவ்வாறு ஸ்டன் சிவா பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE