பாலஸ்தீன ஆதரவு பதிவு: 'ஹாரி பாட்டர்' நடிகைக்கு ஆதரவும் எதிர்ப்பும்!

By செய்திப்பிரிவு

'ஹாரி பாட்டர்' பட நடிகையான எம்மா வாட்சன் பாலஸ்தீனப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக வெளியிட்டுள்ள பதிவு வைரலாகியுள்ளது. அதேநேரம், இஸ்ரேலிய அதிகாரிகள் எம்மா வாட்சன் செயலுக்குக் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளனர்.

'ஹாரி பாட்டர்' சீரிஸ் படங்களில் ஹெர்மியோன் பாத்திரத்தின் மூலமாகப் புகழ்பெற்ற நடிகை எம்மா வாட்சன், நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலஸ்தீனப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீனிய சார்பு பேரணி புகைப்படத்தைப் பதிவிட்டார். காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய 11 நாள் தாக்குதலைக் கண்டித்துச் செல்லப்பட்ட பேரணியில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது.

புகைப்படத்துடன், ''ஒற்றுமை என்பது அர்ப்பணிப்பு மற்றும் வேலை. அதே போல் நமக்கு ஒரே மாதிரியான உணர்வுகள் அல்லது உயிர்கள் அல்லது உடல்கள் இல்லாவிட்டாலும், நாம் பொதுவான அடிப்படையில் வாழ்கிறோம் என்பதை அங்கீகரிப்பது ஒற்றுமை தான்" என்று ஆஸ்திரேலிய ஆர்வலர் சாரா அகமதுவின் வரிகளையும் எம்மா வாட்சன் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவு ஒரே நாளில் ஒரு மில்லியன் லைக்குகள் மற்றும் 89,000க்கும் மேற்பட்ட கமெண்டுகள் என வைரலாகியுள்ளது.

பாலஸ்தீன ஆதரவாளர்கள் பலரும் எம்மா வாட்சனின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ளனர். ஆதரவுகள் ஒருபுறம் இருக்க, ஐ.நா. சபைக்கான இஸ்ரேலின் தூதர் கிலாட் எர்டன், எம்மா வாட்சனின் பதிவை விமர்சித்துள்ளார். ''புனை கதைகள் 'ஹாரி பாட்டர்' படத்தில் வேண்டுமானால் எடுபடும். ஆனால் உண்மை வாழ்க்கையில் புனை கதைகள் வேலைக்கு ஆகாது'' என்று பதில் கொடுத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE