5 நாள்களில் ரூ.60 கோடி: பாக்ஸ் ஆஃபிஸில் '83' தடுமாறியது ஏன்?

By செய்திப்பிரிவு

விமர்சன ரீதியில் கொண்டாடப்பட்டு வரும் '83' திரைப்படம் வசூலில் தடுமாறி வருகிறது. முதல் 5 நாள்களில் ரூ.60 கோடி வரை மட்டுமே வசூலித்திருப்பது படக்குழுவுக்கு ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது.

கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்து வெளியான '83', நான்காவது நாளில் ரூ.7.29 கோடியையும், ஐந்தாம் நாளில் ரூ.6.5 கோடியையும் மட்டுமே வசூலித்ததாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஒட்டுமொத்தமாக, கடந்த 5 நாள்களில் ரூ.59.79 முதல் ரூ.60.79 வரை மட்டுமே வசூல் செய்துள்ளதும் தெரியவருகிறது.

சமூக வலைதளங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றாலும் கூட நட்சத்திரப் பட்டாளங்களை உள்ளடக்கிய இந்த 'பான்-இந்தியா' படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டாதது படக்குழுவுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் '83' . கபீர்கான் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபாண்டம் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கின. கபீர் கான் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ளார். தஹீர் ராஜ் பாசின், சாகீப் சலீம், ஆமி விர்க், ஜீவா, அம்ரிதா பூரி உள்ளிட்ட பலர் இந்திய அணியின் வீரர்களாக நடித்தனர். இப்படம் கடந்த 24ஆம் தேதி அன்று உலகமெங்கும் வெளியானது.

'83' ரிலீஸின்போதே வெளியான தெலுங்குப் படமான 'புஷ்பா'வோ விமர்சன ரீதியில் பெரிதாகப் பாராட்டுகளைப் பெறாவிட்டாலும் ரூ.200 கோடி வசூலை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

பாலிவுட்டின் மையமான மகாராஷ்டிராவில் கரோனா அச்சுறுத்தல் குறையாமல் அதிகரித்து வருவதும் மக்களை தியேட்டர்களை நோக்கிப் படையெடுக்கத் தடையாக இருக்கிறது. இதனிடையே, டெல்லியில் ஒமைக்ரான் அச்சுறுத்தலால் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவிலும் விரைவில் தியேட்டர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்தச் சூழலில், '83'-க்கு பாக்ஸ் ஆஃபிஸில் உரிய இடம் கிடைக்காதது பற்றிய கேள்விக்கு நடிகர் தாஹீர் ராஜ் ரியாக்ட் செய்துள்ளார். கவாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்த அவர், "இரண்டு ஆண்டுகளில் எல்லாமே மாறிவிட்டது. ஓடிடியில் இப்படம் வெளியாகும்போது கிடைக்கும் வரவேற்பே இதற்கு பதில் சொல்லும். எனினும், பெரிய திரைக்குச் சென்று பார்த்த ரசிகர்களின் கொண்டாட்ட மனநிலை என்பது விவரிக்க முடியாதது. நிச்சயம், இந்தப் படைப்பு இந்திய சினிமா வரலாற்றில் மைல்கல்லாக இருக்கும்" என்று கூறியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE