இளம் நடிகர்கள் ரூ.20 - 30 கோடி கேட்கிறார்கள், முடியலை..!- புலம்பும் கரண் ஜோஹர்

By செய்திப்பிரிவு

இளம் நடிகர்கள் ரூ.20 கோடி முதல் ரூ.30 கோடி வரையில் சம்பளம் கேட்கிறார்கள் என்றும், இதனால் விரக்திதான் மிஞ்சுகிறது என்றும் என்று பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் புலம்பியிருக்கிறார்.

கரோனா தொற்று உலகம் முழுவதிலும் பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் திரைப்பட துறையும் பெரும் இழப்பை சந்தித்திருக்கிறது. திரைப்பட படப்பிடிப்புகள் சரிவர நடக்காத காரணத்தால் தினசரி கூலித் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இந்த நிலையில், இளம் நடிகர்கள் தங்களது சம்பளத்தை 100% வரை உயர்த்தி இருப்பதாகவும், ரூ.20 முதல் 30 கோடி வரை சம்பளம் கேட்பதாகவும் பாலிவுட் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளர் கரண் ஜோஹர் புலம்பித் தள்ளியிருக்கிறார்.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் கரண் ஜோஹர் கூறும்போது, “கடந்த சில மாதங்களில் இளம் நடிகர்கள் பலர் தங்களது சம்பளத்தை 100% வரை உயர்த்தியுள்ளனர். சம்பள உயர்வுக்கு தங்களது முந்தைய படங்கள் சரியாக போகாமல் இருப்பதையும், கரோனாவினால் தங்கள் படம் வெளியாகவில்லை என்றும் காரணமாக கூறுகிறார்கள். இது ஆபத்தான போக்கு.

பாக்ஸ் ஆபிஸில் தங்களது பலத்தை நிரூபிக்காத இந்த நடிகர்கள் எந்தக் காரணமும் இல்லாமல் ரூ.20 கோடி முதல் 30 கோடி வரை சம்பளம் கேட்கிறார்கள். இவ்வாறு கேட்கும்போது அவர்களிடம் உங்கள் படம் வெளிவரும்போது இவ்வளவுதான் வசூல் செய்தது என்று காட்ட வேண்டும்.

நான் இவர்களுக்கு இவ்வளவு பெரிய தொகை தருவதற்கு பதிலாக, படங்களை சிறப்பாக்கும் தகவல் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தாரளமாக வழங்குவேன். நான் ஏன் இந்த நடிகர்களுக்கு ரூ.15 கோடியை அளித்துவிட்டு, திரைப்பட எடிட்டருக்கு வெறும் ரூ.55 லட்சம் அளிக்க வேண்டும்?” என்று ஆவேசமாகவும் பாலிவுட் போக்கை பதிவு செய்துள்ளார்.

மற்றொரு தயாரிப்பாளர் நிகில் அத்வானி கூறுகையில், "ஏ-லிஸ்ட்டில் உள்ள நடிகருக்கு ரூ.135 கோடிவரை சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆறு ஏ-லிஸ்ட் நடிகர்கள் இருக்கிறார்கள். இவர்களைதான் பிற நடிகர்களும் பின்பற்றுகிறார்கள்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE