நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆனந்த் எல்.ராய் - தனுஷ் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளியாகியிருக்கும் ‘அத்ரங்கி ரே’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா? இதோ முதல் பார்வை.
தமிழ்நாட்டிலிருந்து வந்து டெல்லியில் மருத்துவம் படித்துக் கொண்டிருப்பவர் விஷு (தனுஷ்). மெடிக்கல் கேம்ப்புக்காக பிஹார் செல்லும்போது அங்கு உறவினர்களிடமிருந்து தப்பித்து ஓடிக் கொண்டிருக்கும் ரிங்குவை (சாரா அலி கான்) பார்க்கிறார். தனது பல வருடக் காதலரான மேஜிக் நிபுணர் சஜ்ஜாத் அலி கானுடன் (அக்ஷய் குமார்) பல முறை வீட்டை விட்டு ஓட முயன்று மாட்டிக் கொள்கிறார். இதனால் குடும்பத்தில் உள்ளவர்களிடம் அடியும் மிதியும் வாங்கிக் கொண்டே இருக்கிறார். பிஹாரைச் சேராத யாராவது ஒருவரைக் கடத்தி வந்து சாராவை திருமணம் செய்து வைக்க உத்தரவிடுகிறார் சாராவின் பாட்டி. அதன்படி தனுஷைப் பிடித்து வந்து சாராவுக்கு வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்கின்றனர்.
தமிழ்நாட்டில் தனுஷுக்கு அவரது காதலியுடன் நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்படுகிறது. மதுரைக்கு சாராவையும் கூட்டிக்கொண்டு வருகிறார். எப்படியோ தனுஷுக்கும் சாராவுக்கும் திருமணமான விஷயம் மணப்பெண்ணுக்குத் தெரியவர திருமணம் நின்று போகிறது. சாராவை அழைத்துக்கொண்டு மீண்டும் டெல்லிக்கே வருகிறார் தனுஷ். இந்தச் சூழலில் தனுஷுக்கு எதிர்பாராத விதமாக சாராவின் மீது காதல் வருகிறது. ஆப்பிரிக்கா சென்றிருக்கும் அக்ஷய் குமார் அந்தத் தருணத்தில் என்ட்ரி கொடுக்கிறார். இந்த மூவரின் வாழ்க்கையிலும் அதன்பிறகு என்னவானது என்பதே ‘அத்ரங்கி ரே’/ ‘கலாட்டா கல்யாணம்’ படத்தின் கதை.
» காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்தவர் இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன்: கமல் புகழஞ்சலி
» மலையாளத்தில் கமல்ஹாசனை அறிமுகப்படுத்திய இயக்குநர் சேதுமாதவன் மறைவு
தனுஷ் - சாரா அலி கான் - அக்ஷய் குமார் இந்த மூவருக்கும் இடையே நிகழும் முக்கோணக் காதல்தான் படத்தின் மையக்கரு என்றாலும் அதனை எதிர்பாராத ட்விஸ்ட்களும் தன்னால் இயன்றவரையில் சுவாரஸ்யமாகச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ஆனந்த் எல்.ராய். இதுவரை நாம் பார்த்த முக்கோணக் காதல் கதைகளிலிருந்து மாறுபட்டு முற்றிலும் புதியதொரு கதையைச் சொல்லியிருக்கிறார் கதாசிரியர் ஹிமான்ஷு ஷர்மா.
படம் தொடங்கியவுடனே நேரே கதைக்குள் சென்றுவிடுவது ஆறுதல். கதாபாத்திர அறிமுகங்களுக்கென தனியான காட்சிகள் ஏதுமின்றி நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுவதால் சாரா அலி கான் ஓடிவரும் முதல் காட்சியே நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது. அதன்பிறகு தனுஷ் - சாரா அலி கான் கட்டாயத் திருமணம், டெல்லி ஹாஸ்டல், பின்னர் தமிழ்நாட்டுக்கு வருவது என தனுஷின் திருமணம் தடைபடுவது வரை காட்சிகள் ஜெட் வேகத்தில் நிற்காமல் நகர்கின்றன.
ஆனந்த் எல்.ராயின் முந்தைய படங்களில் தாராளமாக இருக்கும் நகைச்சுவை இந்தப் படத்திலும் கைகொடுத்திருக்கிறது. தனுஷின் நண்பராக வரும் ஆஷிஷ் வர்மா காமெடிக்குப் பெரிதும் உதவியிருக்கிறார். அதேபோல படத்தில் வரும் எமோஷனல் காட்சிகள். படம் தொடங்கியது முதல் இறுதி வரை ஆங்காங்கே வரும் உணர்வுபூர்வமான எமோஷனல் காட்சிகளும், அதற்கேற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும் கதையோட்டத்துக்குப் பெரும்பலம்.
படம் தொடங்கியது முதலே நமக்குப் பல்வேறு கேள்விகளும் தொடங்கி விடுகின்றன? சாரா அலி கானின் காதலரான அக்ஷய் குமாரை சாராவின் பாட்டி உட்பட அவரது குடும்பத்தினர் யாருமே பார்த்ததில்லை என்று சொல்கிறார்கள். அவரது பெயர் கூட அவர்களுக்குத் தெரியவில்லை. அப்படி இருக்கையில் எதற்காக சாராவை இப்படி கொடுமைப்படுத்த வேண்டும்? அடுத்து ஊர் பேர் தெரியாத யாரோ ஒருவருக்கு அவரைக் கட்டிக் கொடுத்து வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடிவெடுக்கிறார்கள். அதற்கு பதில் விட்டிருந்தால் சாரா அலி கானே வீட்டை விட்டுப் போயிருப்பாரே? எதற்கான இத்தனை செலவு செய்து திருமணம்? டெல்லி போனதும் ஆளுக்கு ஒரு பாதையில் பிரிந்து போய்விட வேண்டும் என்று முடிவெடுத்த பிறகும் எதற்காக சாராவை தனது ஹாஸ்டலுக்கு தனுஷ் கூட்டிச் செல்கிறார். அப்படி எந்த பாய்ஸ் ஹாஸ்டலில் ஒரு இளம்பெண்ணை இத்தனை நாள் தங்க அனுமதிக்கிறார்கள்? இன்னும் பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் இது எதற்கும் படத்தில் பதில் இல்லை. திருமணம் நின்ற பிறகு மணப்பெண்ணின் தந்தை சாரா அலி கானைத் திட்டுகிறார். அப்போது தனுஷ் ‘எங்களுக்கு நடந்தது கட்டாயத் திருமணம் தான். ஆனாலும் இவள் என் மனைவி’ என்று சொல்கிறார். அப்புறம் எதுக்கு சார் இந்தக் கல்யாணத்துக்குக் கிளம்பி வந்தீங்க? என்று கேட்கத் தோன்றுகிறது.
இத்தனை கேள்விகள் இருந்தாலும் முதல் பாதி எங்கும் போரடிக்காமல் சுவாரஸ்யமாகவே செல்கிறது. ஆனால், முதல் பாதியில் இருந்த வேகமும் சுவாரஸ்யமும் இடைவேளைக்குப் பிறகு எங்கே போனதென்றே தெரியவில்லை. அடுத்தடுத்து தொடர்ந்து படு திராபையான காட்சிகள் வந்துகொண்டிருக்கின்றன. சாரா அலிகானுக்காக தனுஷ் மேஜிக் ஷோ ஏற்பாடு செய்து அதைப் பார்க்க தன் நோயாளிகளைக் கூட்டி வருவது, ஆக்ரா கூட்டிச் சென்று அங்கு கைதட்ட ஆட்களைக் காசு கொடுத்து ஏற்பாடு செய்வது எனக் காட்சிகள் அனைத்தும் பார்ப்பவர்களின் பொறுமையைக் கடுமையாக சோதிக்கின்றன.
தனுஷ் இன்னும் எத்தனை நாளைக்கு கல்லூரி மாணவனாக நடித்தாலும் ஏற்றுக் கொள்ளலாம் போலிருக்கிறார். அந்த அளவுக்கு எனர்ஜியுடன் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார். நடிப்பு குறித்துப் புதிதாக சொல்ல ஏதுமில்லை. வழக்கம்போல எமோஷனல் காட்சிகளில் தனக்கே உரிய முகபாவனைகளால் அசத்துகிறார்.
சாரா அலி கானின் நடிப்பிலும் குறை சொல்ல ஏதுமில்லை. கதையே அவரைச் சுற்றித்தான் நிகழ்கிறது என்பதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர் அக்ஷய் குமார். தனுஷ் - சாராவுக்கு ஈடான காட்சிகள் அக்ஷய்க்கு இல்லையென்றாலும் அறிமுகக் காட்சியில் சிரிக்க வைத்து இறுதியில் கண்கலங்க வைக்கிறார். மிகச் சிறப்பான கதாபாத்திர வடிவமைப்பு அக்ஷய் குமாருடையது.
ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை படத்துக்குப் பெரும் பலம். தொய்வடையும் பல காட்சிகளைத் தூக்கி நிறுத்தும் வேலையைச் செவ்வனே செய்கிறது. படத்தின் முடிவில் ‘எ ஃப்லிம் பை ஏ.ஆர்.ரஹ்மான்’ என்று போடும்போது அதன் தாக்கத்தை உணர முடியும். பாடல்கள் அனைத்துமே யூடியூப், இன்ஸ்டா என ஹிட்டடித்துவிட்டாலும் படம் முடிந்தும் ‘சக்கா சக்’ பாடல் முணுமுணுக்க வைக்கிறது. படத்திலும் அது சிறப்பாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. பங்கஜ் குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல்லாக இருக்கின்றன.
ஒரு படம் நம் மனதில் நிற்பதும், பார்த்த அடுத்த நிமிடமே மறந்துவிடுவதும் அப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில்தான் இருக்கிறது. அந்த வகையில் முந்தைய காட்சிகளில் இருக்கும் தொய்வையும், குறைகளையும் மறக்கடிக்கச் செய்யும் உணர்வுபூர்வமான ஒரு க்ளைமாக்ஸ் காட்சியை வைத்துள்ளார் இயக்குநர். அக்ஷய் மற்றும் சாரா இடையே நடக்கும் அந்த உரையாடலும் பார்க்கும் எவரையும் கலங்க வைக்கும். ஆனால் அந்த அட்டகாசமான க்ளைமாக்ஸை அனுபவிக்க அதற்கு முன்னால் இருக்கும் கடும் திராபையான காட்சிகளை நாம் பொறுத்தருள வேண்டும்.
இரண்டாம் பாதி திரைக்கதையைச் செதுக்கி, முதல் பாதியில் இருக்கும் சந்தேகங்களைக் களைந்திருந்தால் ஆனந்த் - தனுஷ் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் முந்தைய படமான ‘ராஞ்சனா’வை விஞ்சியிருக்கும் இந்த ‘அத்ரங்கி ரே’/ ‘கலாட்டா கல்யாணம்’.
முக்கிய செய்திகள்
சினிமா
13 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago