பெரிய ஹீரோக்களால் தமிழ்நாட்டுக்கு என்ன பயன்?- தயாரிப்பாளர் கே.ராஜன் சரமாரி கேள்வி

By செய்திப்பிரிவு

பெரிய ஹீரோக்களால் தமிழ்நாட்டுக்கு என்ன பயன் என்று தயாரிப்பாளர் கே.ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நபீஹா மூவீஸ் நிறுவனம் தயாரிப்பில் மகேஷ் பத்மநாபன் இயக்கியுள்ள படம் 'சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை'. இதில் புதுமுகம் ருத்ரா நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு பேசினர்.

இதில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது:

"சிறு படங்கள் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக ஆத்மார்த்தமாக வாழ்த்த இங்கு வருகிறோம். நாங்கள் கஷ்டப்பட்டதெல்லாம் வேறு. நான் கஷ்டப்பட்டது எல்லாமே சினிமா நன்றாக இருக்கவேண்டும் என்றுதான். இந்தப் படம் வெற்றி பெற்று அசல் தேறினாலே போதும். தயாரிப்பாளர் ரகுமான் உடனே இரண்டு படத்தை அறிவித்துவிடுவார்.

ரூ.50 கோடி, ரூ.100 கோடி சம்பளம் வாங்கும் ஹீரோக்களைக் கேட்கிறேன். நீங்கள் வாங்குகிற பணம் எல்லாம் சினிமாவுக்கு வந்திருக்கிறதா? உங்களால இந்த தமிழ்நாட்டுக்கு என்ன பயன்? ஏழை ரசிகர்கள் தருகிற பணம்தான் உங்களை கோடீஸ்வரர்கள் ஆக்குகிறது.

இங்கே ஒரு தமிழ் நடிகை அழகாக சேலை கட்டி வந்திருக்கிறார். இதே ஒரு வட இந்தியப் பெண் என்றால் எப்படி வருவார்? நம் படங்களில் தமிழ்ப் பெண்களையே நடிக்க வையுங்கள்'.

இவ்வாறு தயாரிப்பாளர் கே.ராஜன் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE