‘ஜெயில்’ மீதான எதிர்பார்ப்பு ஏமாற்றத்தைத் தந்துவிட்டது: பட்டுக்கோட்டை பிரபாகர்

By செய்திப்பிரிவு

‘ஜெயில்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏமாற்றத்தைத் தந்துவிட்டதாக எழுத்தாளர், வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நடித்துள்ள படம் 'ஜெயில்'. அபர்ணதி, ராதிகா சரத்குமார் நடித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.

‘அங்காடித் தெரு’ தந்த வசந்தபாலன் என்கிற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தைத் தந்துவிட்டதாக வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் ‘ஜெயில்’ படத்தை விமர்சித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

''குடிசை மாற்று வாரியத்தால் நகரத்திற்கு வெளியே குடியேற்றப்படுகிறவர்களின் வாழ்க்கைதான் கதை.

ஊருக்கு வெளியே குடியமர்த்தப்படுவதால் அங்கே வளரும் குழந்தைகளுக்குக் கல்வி இல்லை. அங்கிருப்பவர்களுக்கு மருத்துவ வசதி இல்லை. பணிகளுக்கு நகரத்திற்குள் வரவேண்டியிருக்கிறது. அங்கே பெரும்பாலும் சமூகக் குற்றவாளிகள் உருவாகிறார்கள் என்று இயக்குநர் வசந்தபாலன் தன் கருத்தை ஒரு கதைக்குள் மடித்துவைத்துத் தந்திருக்கிறார்.

இந்தக் கருத்தை முழுமையாக ஏற்க இயலவில்லை. சென்னை நகரத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தள்ளி வாழ்கிற பலதரப்பட்ட மக்கள் பிழைப்பிற்காக சென்னைக்குள் தினமும் வந்துசென்று கொண்டிருக்கிறார்கள்.

நகரத்திற்குள் வாழ்கிறவர்கள் மத்தியில் குற்றவாளிகள் உருவாவதில்லையா என்ன? சினிமாக்களில் தொடர்ந்து ரவுடிகளின் ஏரியா என்று பிராண்ட் செய்யப்படும் காசிமேடு, ராயபுரம் பகுதிகளிலிருந்து டாக்டர்களும், இன்ஜினீயர்களும் உருவாகவில்லையா என்ன?

இவர் குறிப்பிடும் கண்ணகி நகர் (படத்தில் காவிரி நகர்) பகுதியிலிருந்து நான் குடியிருக்கும் அடையாறு பகுதிக்குப் பணிகளுக்கு வந்துசெல்லும் பலரை நான் அறிவேன். நேர்மை குறையாமல் உழைப்பை மட்டும் நம்புகிறவர்கள். கார் துடைக்கிறார்கள். எலக்ட்ரீஷியனாக இருக்கிறார்கள். நியூஸ் பேப்பர் போடுகிறார்கள். வாட்டர் கேன் போடுகிறார்கள். கேஸ் ஏஜென்சியில் பணிபுரிகிறார்கள்.

படத்திலும்கூட ஹீரோவின் அம்மா பால் போடுகிறார். காதலி பிரியாணி விற்கிறார். நண்பன் பெட்ரோல் பங்க்கில் பணி புரிகிறார். அப்படியிருக்க போதை மருந்து விற்கும் இரண்டு கும்பலுக்கு நடுவில் ஏற்படும் பிரச்சினைகளையும், குறுக்கு வழியில் தன் லாபத்திற்காக அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளும் போலீஸ் அதிகாரியையும் கதையில் பிரதானமாகச் சொல்ல இந்தக் குடியமர்த்தல் பிரச்சினை எப்படி சம்பந்தப்படுகிறது என்று புரியவில்லை.

ஹீரோவைத் திருடனாகக் காட்டுகிறார். அவரைத் திருத்த யாரும் ஒரு முயற்சியும் செய்வதாக இல்லை. கூர்நோக்கு இல்லம் சென்று திரும்பும் கலை என்கிற பாத்திரம்தான் கதையின் நாயகன் போலத் தோன்றுகிறது.

டூயட் பாடுவதாலும், பிரதானமாக நின்று சண்டை போடுவதாலும் மட்டுமே கர்ணாவைக் கதாநாயகனாகக் காட்டுகிறார்கள். மற்றபடி அவர் மீது ஒரு ஈர்ப்போ இரக்கமோ வரும்படியாக திரைக்கதை இல்லை.

கதைக்குள் வருகிற உப கதைகளில் பெட்ரோல் பங்க் காதலும், தம்பிக்காகவும் தன் உடல்நலக் குறைவாலும் திருமணம் வேண்டாம் என்று சொல்லும் அக்காவின் பழைய காதலும் அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

‘அங்காடித் தெரு’ தந்த வசந்தபாலன் என்கிற எதிர்பார்ப்புடன் போய்ப் படம் பார்க்க அமர்ந்ததும் என் ஏமாற்றத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாமோ?''

இவ்வாறு பட்டுக்கோட்டை பிரபாகர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE