டிக்கெட் முன்பதிவில் சாதனை படைத்த 'ஸ்பைடர்மேன்' - இணையதளங்கள் முடங்கின

By செய்திப்பிரிவு

'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படத்துக்கான டிக்கெட் முன்பதிவு செய்ய உலகம் முழுவதும் பலரும் ஒரே நேரத்தில் முயன்றதால் டிக்கெட் விற்பனைத் தளங்கள் முடங்கின.

மார்வெல் - சோனி கூட்டுத் தயாரிப்பில் மூன்றாவது படமாக 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' உருவாகியுள்ளது. கடந்த ‘ஸ்பைடர்மேன்’ படங்களில் முக்கியப் பாத்திரங்களாக நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமீ உள்ளிட்ட அனைவருமே இந்தப் படத்திலும் நடித்துள்ளனர்.

மார்வெல் ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வெளியாகும் படம் என்பதால் படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே இப்படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படம் வரும் டிசம்பர் 16 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இதனை முன்னிட்டு சமீபத்தில் திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை தொடங்கியது.

ஒரே நேரத்தில் அதிகமானோர் டிக்கெட் புக்கிங் செய்ய முயன்றதால் உலகம் முழுவதுமுள்ள டிக்கெட் புக்கிங் இணையதளங்கள் அனைத்தும் முடங்கின. டிக்கெட் புக்கிங் செய்வதற்கான தளங்கள் திறக்கப்பட்ட ஒருசில நிமிடங்களிலேயே உலகம் முழுவதும் லட்சக்கணக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. பலரும் தங்களால் டிக்கெட் புக் செய்ய இயலவில்லை என்று தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் முறையிட்டதால் ‘ஸ்பைடர்மேன்’ தொடர்பான ஹேஷ்டேகுகள் உலக அளவில் ட்ரெண்டாகின.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE