முதல் பார்வை- மரைக்காயர்: அரபிக் கடலின் சிங்கம்

By சல்மான்

16 ஆம் நூற்றாண்டில் கேரளாவில் சாமுத்ரி ராஜ்ஜியத்தில் கடற்படை தளபதியாக விளங்கிய குஞ்சாலி மரைக்காயரின் கதையை பேசுகிறது ‘மரைக்காயர்: அரபிக் கடலின் சிங்கம்’.

சிறுவயது முதலே அம்மாவின் செல்லப்பிள்ளையாக வளர்கிறார் முஹம்மது அலி என்கிற குஞ்சாலி மரைக்காயர். இளைஞனாக வளர்ந்தபின்பும் பாலும் தேனும் ஊட்டி பாசமாக வளர்க்கிறார் அம்மா சுஹாசினி. ப்ரணவுக்கு (குஞ்சாலி மரைக்காயர்) திருமணம் நடப்பதற்கு முதல் நாள் மணபெண்ணான கல்யாணி ப்ரியதர்ஷன் உட்பட ஒட்டுமொத்த மரைக்காயர் குடும்பத்தையும் போர்ச்சுகீசிய படைகளின் உதவியுடன் எதிரிகள் கொல்கின்றனர்.

அந்த தாக்குதலில் தனது சித்தப்பா சித்திக்குடன் தப்பித்து ஒரு நாடோடியைப் போல வாழ்கிறார் ப்ரணவ். ஆள்பவர்களிடமிருந்து உணவு தானியங்களை கொள்ளையடித்து ஏழை மக்களுக்கு கொடுக்கிறார். யார் கண்ணிலும் படாமல் ஒரு நிழலைப் போல ஆள்பவர்களை ஆட்டுவிக்கிறார். போர்ச்சுகீசியப் படைகளை சமாளிக்க முடியாமல் திணறும் சாமுத்ரி அரசர் மரைக்காயரின் உதவியை நாடுகிறார். தனது சிற்றரசர்கள் சிலரின் எதிர்ப்பையும் மீறி மரைக்காயரோடு கைகோர்க்கிறார். எதிரிகளின் கடற்படைகளை வீழ்த்தி அரசவையில் கடற்படை தளபதியாகவும் பொறுப்பேற்கிறார். இதனிடையே மரைக்காயருக்கும் சாமுத்ரி அரசவைக்கும் இடையில் கீர்த்தி சுரேஷின் காதலால் விரிசல் ஏற்படுகிறது. இதன் பின்னர் என்னவானது என்பதே ‘மரைக்காயர்: அரபிக் கடலின் சிங்கம்’ படத்தின் கதை.

1996ஆம் ஆண்டு மோகன்லால் - ப்ரியர்தர்ஷன் கூட்டணியில் வெளியான ‘சிறைச்சாலை’ படத்துக்குப் பிறகு திட்டமிடப்பட்ட இப்படம் ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பிறகு சாத்தியமாகியிருக்கிறது.

வரலாற்றுப் படங்களை திரைக்கு கொண்டு வருவதில் இருக்கும் இரண்டு சவால்களில் ஒன்று விசுவல் கிராபிக்ஸ் மற்றொன்று ஆடியன்ஸை உள்ளிழுத்துக் கொள்ளும் திரைக்கதை. இந்த இரண்டில் ஒன்றில் ஜெயித்துள்ள இயக்குநர், மற்றொன்றில் கோட்டை விட்டுள்ளார்.

படம் தொடங்கி கிட்டத்தட்ட முதல் பாதி முழுக்கவே புதிது புதிதாக கதாபாத்திரங்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றனர். கதாபாத்திரங்களின் பெயர்களையும், அவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வதற்குள்ளாகவே பாதிப் படம் முடிந்து விடுகிறது. மரைக்காயரின் இளமைக் காலம் குறித்து நமக்கு காட்டப்படும் போதும் அவரது இழப்பும் நமக்கு எந்தவிதமாக தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் அதற்கு பின்னால் வரும் காட்சிகளில் ஒன்றமுடியாமல் போய்விடுகிறது.

குஞ்சாலி மரைக்காயராக மோகன்லால். கதைக்களத்துக்கு ஏற்ப ஒட்டுமொத்த படத்தையும் ஒற்றை ஆளாக தாங்கிப் பிடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் வேற யாரையும் நினைத்துப் பார்க்க முடியாதபடி சின்ன சின்ன மேனரிசங்களிலும் கூட அசத்துகிறார். மோகன்லால் தவிர்த்து மறைந்த நெடுமுடிவேணு, சுனில் ஷெட்டி, அர்ஜுன், அசோக் செல்வன், பிரபு, கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், ஹரீஷ் பெரடி என படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள். நடிகர்களின் பட்டியலை முழுதாக எழுதவே இன்னொரு பக்கம் தேவைப்படும் என்பதால் முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளோம். இளவயது மரைக்காயராக வரும் ப்ரணவ் மோகன்லாலுக்கு இது பேர் சொல்லும் படமாக இருக்கும். குறைந்த நேரமே படத்தில் வந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார்.

படத்தில் இத்தனை நடிகர்கள் இருந்தும் அவர்கள் யாருக்குமே பாத்திரப் படைப்பு சரியாக அமையாமல் போனது சோகம். இதில் மோகன்லாலும் விதிவிலக்கல்ல. கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர் கதாபாத்திரங்கள் தான் படத்தின் போக்கையே மாற்றக் கூடியவை என்றாலும் அவை சரியாக சொல்லப்படாததால் அவற்றால் நமக்கு எந்தவித தாக்கமும் ஏற்படவில்லை. இதே போல் அர்ஜுன், பிரபு, ஹரீஷ் பெரடி, சுனில் ஷெட்டி என அனைவரது கதாபாத்திரங்களும் வீணடிக்கப்பட்டுள்ளன.

படத்தின் மிகப்பெரிய பிரச்சினையே திரைக்கதைதான். மூன்று மணி நேரம் ஓடக்கூடிய படத்தில் ஆங்காங்கே சில நல்ல காட்சிகள் இருந்தாலும் அதனை ஒன்றாக இணைக்கக் கூடிய சுவாரஸ்யம் திரைக்கதையில் இல்லாததால் ஆங்காங்கே கடும் சலிப்பை ஏற்படுத்துகிறது.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ப்ளஸ் என்றால் அது கிராபிக்ஸ் தான். இதுவரை ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ போன்ற ஹாலிவுட் படங்களில் மட்டுமே பார்த்து வியந்த போர்க்கள காட்சிகளை கண்முன்னே நிறுத்தியதில் காட்சிக்குக் காட்சி கிராபிக்ஸ் குழுவினரின் உழைப்பு வியக்கவைக்கிறது. அதே அளவுக்கு கலை இயக்குநர் சாபு சிரில் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு ஆகியோர் பாராட்டப்படவேண்டியவர்கள்.

படத்துக்கு இசை ராகுல் ராஜ், அன்கித் சுரி, லயல் எவான்ஸ் ரோடர், ரோனி ரஃபேல். ஒரு வரலாற்றுப் படத்துக்கு எது தேவையோ அதைக் கொடுத்து படத்தை தாங்கிப் பிடிக்கின்றனர். சில காட்சிகளில் சீரியல்களில் வரும் பின்னணி இசை ஞாபகத்துக்கு வருவதையும் தவிர்க்கமுடியவில்லை.

படத்தில் போர்க்களக் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்க வைக்கின்றன. முதல் பாதியின் முடிவில் போர்ச்சிகீசியப் படைகளை மரைக்காயரின் படைகள் வெல்லும் காட்சியையே உதாரணமாக சொல்லலாம். அதே போல இரண்டாம் பாதியில் சாமுத்ரி படைகளுக்கும் மரைக்காயர் படைகளுக்கும் நடக்கும் யுத்தமும் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. க்ளைமாக்ஸில் மோகன்லாலில் நடிப்பும், பின்னணி இசையும் பார்ப்பவர்களின் கண்களை குளமாக்குகின்றன.

உலகத் தர கிராபிக்ஸ், மிகச்சிறந்த நடிகர்கள், பின்னணி இசை என ஒரு வெற்றிப் படத்துக்கான அனைத்துக் காரணிகளும் இருந்தும் திரைக்கதையின் தொய்வினால் ஒருமுறை மட்டுமே பார்க்கக் கூடிய படமாக நின்று விடுகிறது ‘மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம்’. மூன்று மணி நேர படம் முடிந்து வெளியே வரும்போது படத்தின் க்ளைமாக்ஸை தவிர வேறு எந்த காட்சியும் நினைவில் நிற்கவில்லை.

படத்தின் நீளத்தை குறைத்து திரைக்கதையின் சுவாரஸ்யத்தை சற்றே கூட்டியிருந்தால் குஞ்சாலி மரைக்காயருக்கு மிகச்சிறந்த சமர்ப்பணமாக அமைந்திருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE