சமூக வலைதளங்களில் தொடர் கொலை மிரட்டல்: கங்கணா ரணாவத் போலீஸில் புகார்

By செய்திப்பிரிவு

சமூக வலைதளங்களில் தொடர் மிரட்டல் விடுப்பவர்களுக்கு எதிராக கங்கணா ரணாவத் புகாரளித்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாகத் திகழ்பவர் கங்கணா ரணாவத். அவ்வப்போது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டு விவாதங்களைக் கிளப்புவார். ட்விட்டரில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டதால் அவரது கணக்கை ட்விட்டர் நிர்வாகம் நிரந்தரமாக முடக்கியது.

இதனைத் தொடர்ந்து கங்கணா தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார். அதிலும் அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளைப் பதிவிடுதால் கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் வேளாண் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்களைக் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டு சர்ச்சையில் சிக்கினார். அவருக்கு எதிராக சீக்கிய அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தன.

இந்நிலையில், தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பவர்களுக்கு எதிராகத் தான் காவல்துறையில் புகாரளித்துள்ளதாக கங்கணா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூரும் விதமாக, துரோகிகளை மன்னிக்கவோ மறக்கவோ கூடாது என்று எழுதினேன். இவ்வாறான சம்பவங்களில் உள்நாட்டு துரோகிகளின் கைவரிசை உள்ளது. பணத்துக்காகவும், பதவிக்காகவும், அதிகாரத்திற்காகவும் பாரதத் தாயைக் களங்கப்படுத்த துரோகிகள் தயங்கியதே இல்லை. நாட்டிற்குள் இருக்கும் துரோகிகள் சதி செய்து தேசவிரோத சக்திகளுக்கு உதவி செய்துகொண்டே இருந்ததே இதுபோன்ற சம்பவத்துக்கு வழிவகுத்தது என்று பதிவிட்டேன்.

என்னுடைய இந்தப் பதிவுக்காகத் தீய சக்திகளிடமிருந்து தொடர்ந்து எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. சகோதரர் ஒருவர் என்னைக் கொலை செய்யப்போவதாக வெளிப்படையாக மிரட்டியுள்ளார். இதுபோன்ற மிரட்டல்களுக்கு நான் பயப்படமாட்டேன். நாட்டுக்கு எதிராக சதி செய்பவர்களுக்கு எதிராக நான் பேசுகிறேன், எப்போதும் பேசுவேன்''.

இவ்வாறு கங்கணா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE