பட்டாசு, பாலபிஷேகம் வேண்டாம்: ரசிகர்களுக்கு சல்மான் கான் கண்டிப்பு

By செய்திப்பிரிவு

ரசிகர்கள் பட்டாசு வெடிப்பதையும், பாலபிஷேகம் செய்வதையும் நடிகர் சல்மான் கான் கண்டித்துள்ளார்.

மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள படம் ‘அந்திம்: தி ஃபைனல் ட்ரூத்’. இப்படத்தில் ஆயுஷ் சர்மா, மஹிமா மக்வானா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சல்மான் கான் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் கடந்த 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் திரையரங்குகளில் சல்மான் கான் ரசிகர்கள் சிலர் பட்டாசுகளை வெடிப்பது, சல்மான் கான் படத்துக்குப் பாலபிஷேகம் செய்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின. அந்த வீடியோக்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சல்மான் கான், இதுபோன்ற காரியங்களில் ஈடுபட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

''திரையரங்கிற்குள் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று என்னுடைய ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அது உங்கள் உயிருக்கும் அடுத்தவர்களின் உயிருக்கும் பெரும் ஆபத்தாய் முடியும். பட்டாசுகளைத் திரையரங்கத்துக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று திரையரங்க உரிமையாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு சல்மான்கான் கூறியுள்ளார்.

மற்றொரு பதிவில், ''சிலர் தண்ணீர் கூடக் கிடைக்காமல் கஷ்டப்படும்போது நீங்கள் பாலை வீணாக்குகிறீர்கள். பாலைப் பயன்படுத்த விரும்பினால், அதை வாங்க முடியாத ஏழைக் குழந்தைகளுக்கு வழங்குமாறு ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE