முதல் பார்வை: வனம்

By சல்மான்

புதிதாகத் தொடங்கப்படும் நுண்கலைக் கல்லூரி ஒன்றின் விடுதியில் பெயிண்டிங் வேலை செய்துகொண்டிருக்கும் ஒருவர் அங்குள்ள ஒரு அறையில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். இதன் பிறகு கல்லூரி தொடங்கப்பட்டதும் அங்கு முதலாம் ஆண்டு மாணவராகச் சேர்கிறார் மகிழ் (வெற்றி). அந்தக் கல்லூரியைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை இயக்க அங்கு வருகிறார் ஜாஸ்மின் (ஸ்மிருதி வெங்கட்).

இந்தச் சூழலில் அந்த பெயிண்டர் இறந்த அதே அறையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து போகின்றனர். இதனைத் தொடர்ந்து அந்த மரணங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மங்களை ஆராயத் தொடங்கும் வெற்றி மற்றும் ஸ்மிருதி வெங்கட் இருவருக்கும் அந்தக் கல்லூரி தொடங்கப்பட்டதன் பின்புலம் தெரியவருகிறது.

1960களில் அந்த ஊரில் ஜமீன்தார் வேல ராமமூர்த்தி, அவர் பெண்களுக்குச் செய்யும் சித்ரவதை, காட்டில் வாழும் பழங்குடி மக்களின் தலைவியாக வரும் அனுசித்தாரா உள்ளிட்ட தகவல்களைப் பற்றித் தெரிந்து கொள்கின்றனர். அந்த மர்ம மரணங்களை அவர்களால் தடுக்க முடிந்ததா? என்பதே ‘வனம்’ படத்தின் கதை.

படத்தின் டைட்டிலுக்குப் பட்டாம்பூச்சி ஒன்று கூட்டிலிருந்து புறப்படும் காட்சியும், அதனைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் நம்மை நிமிர்ந்து உட்காரச் செய்கின்றன. ஆனால், அதன் பிறகு வரும் காட்சிகளில் பார்வையாளர்களுக்கு திகிலூட்ட இயக்குநர் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் எடுபடாமல் போகின்றன. மறுபிறவி, முன் ஜென்ம தோற்றத்தைக் காட்டும் மாயக் கண்ணாடி, வன தேவதை என எடுத்துக்கொண்ட சுவாரஸ்யமான கதையின் மூலம் ஒரு அருமையான ஃபேன்டஸி அனுபவத்தைப் பார்ப்பவர்களுக்கு கொடுத்திருக்கலாம். ஆனால். இயக்குநர் ஸ்ரீகண்டன் ஆனந்த் கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

நாயகனாக வெற்றி. தன் முந்தைய படங்களைப் போலவே இதிலும் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான கதாபாத்திரம். அதனை எந்தக் குறையுமின்றி சரியாகச் செய்துள்ளார். எனினும் பல காட்சிகளில் ‘ஜீவி’ படம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

நாயகியாக ஸ்மிருதி வெங்கட். படம் முழுக்க நாயகனோடு பயணம் செய்யும் பாத்திரம். அதை நிறைவாகச் செய்திருக்கிறார். அழகம் பெருமாள், வேல ராமமூர்த்தி, அனு சித்தாரா என அனைவருமே தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களுக்கு நியாயம் செய்து நடித்துள்ளனர்.

படத்தின் மிகப்பெரிய மைனஸ் திரைக்கதைதான். எடுத்துக்கொண்ட கதைக்களம் திகில் ஃபேண்டஸி என்றாலும் காட்சிகளில் சுவாரஸ்யம் இல்லாததால் பார்க்கும் நமக்கு எந்தவிதத் தாக்கமும் ஏற்படவில்லை. தொடக்கம் முதல் இறுதி வரை எளிதில் ஊகிக்கக் கூடிய காட்சிகள். அந்த கிளைமாக்ஸ் ட்விஸ்ட் மட்டுமே திருப்தியடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முந்தைய அழுத்தம் இல்லாததால் அதுவும் எடுபடாமல் போய்விடுவது சோகம்.

படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு. வனத்தை அதற்கே உரிய பசுமையையும், மர்மத்தையும் அழகாகக் காட்சிப்படுத்தியதில் ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகனின் உழைப்பு தெரிகிறது. ரான் ஈத்தன் யோஹானின் பின்னணி இசையும் குறிப்பிடும்படி இருக்கிறது. பாடல்கள் மனதில் ஒட்டவில்லை.

ஆவணப்பட இயக்குநர் ஸ்மிருதி வெங்கட் என்பதோடு நிறுத்தியிருக்கலாம். ஆனால், அவர் நாயகனின் சிறு வயது தோழி என்ற பூசுற்றல் எல்லாம் கதைக்குத் தொடர்பே இல்லாமல் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் பயன்பட்டுள்ளது. அதேபோல அனு சித்தாரா ஜமீன்தாரான வேல ராமமூர்த்தியிடம் பழங்குடியின மக்களின் கஷ்டங்களைப் பேசும் காட்சி எல்லாம் வலிந்து திணிக்கப்பட்டவை. இதுபோலக் கதைக்குத் தொடர்பே இன்றி போகிற போக்கில் பேசப்படும் முக்கியமான விஷயங்கள் எதிர்காலத்தில் அதற்கான கதைக்களத்துடன் எடுக்கப்படும் படங்களில் பேசப்படும்போது தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகும் அபாயம் ஏற்படலாம்.

திகில், ஃபேண்டஸி, பீரியட் எனப் பல்வேறு தளங்களில் மாறி மாறிப் பயணித்தாலும் திகில் படமாகவும் இல்லாமல், ஃபேண்டஸி படமாகவும் இல்லாமல் தடுமாறுகிறது இந்த ‘வனம்’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE