‘கே.ஜி.எஃப் 2’ படக்குழுவிடம் மன்னிப்பு கேட்ட ஆமிர் கான்

‘கே.ஜி.எஃப் 2’ படக்குழுவிடம் தான் மன்னிப்பு கேட்டதாக ஆமிர் கான் கூறியுள்ளார்.

டாம் ஹாங்ஸ் நடிப்பில், ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் 1994-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump). ஹாலிவுட்டில் வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று எனப் பெயர் பெற்று, உலக அளவில் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்டது.

இந்தப் படத்தின் அதிகாரபூர்வ இந்தி ரீமேக்கில் ஆமிர் கான் நடித்து வருகிறார். அத்வைத் சந்தன் இயக்கி வரும் இந்தப் படத்துக்கு 'லால் சிங் சட்டா’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. இதில் நாயகியாக கரீனா கபூர் நடித்துள்ளார்.

இப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கெனவே இதே தேதியில் ‘கே.ஜி.எஃப் 2' படம் என்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ‘கே.ஜி.எஃப்’ முதல் பாகம் இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்ற படம் என்பதால் அதன் இரண்டாம் பாகத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால் இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘கே.ஜி.எஃப் 2' படக்குழுவினரிடம் தான் மன்னிப்பு கேட்டதாக நடிகர் ஆமிர் கான் கூறியுள்ளார். சமீபத்தில் சினிமா ஊடகம் ஒன்றுக்கு ஆமிர் கான் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

''விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளைச் செய்வதில் இரண்டு விதம் இருக்கிறது. ஒன்று அவசர அவசரமாக வேலைகளை முடிப்பது. மற்றொன்று தரமான வேலைகளைச் செய்வது. நான் அவசர அவசரமாக வேலைகளை முடிக்க விரும்பவில்லை. இதனால் தள்ளிப் போகட்டும் என்று தீர்மானித்தேன்.

தேதியை முடிவு செய்யும் முன்பாக ‘கே.ஜி.எஃப் 2' படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டூர், இயக்குநர் பிரசாந்த் நீல், நாயகன் யாஷ் உள்ளிட்டோரிடம் நான் மன்னிப்பு கேட்டேன். அவர்களுக்கு என்னுடைய சூழலை விளக்கி, கடிதம் எழுதியிருந்தேன். தயாரிப்பாளர்களுக்கு இந்த கரோனா ஊரடங்கு எப்படியான சிரமங்களைக் கொடுத்தது என்றும் கூறினேன். அவர்கள் என்னுடைய தரப்பு நியாயத்தைப் புரிந்துகொண்டு அதே நாளில் படத்தை வெளியிடுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தனர். அவர்களது பெருந்தன்மையால் நான் நெகிழ்ந்து போனேன். நாயகன் யாஷோடு இதயப்பூர்வமாக உரையாடினேன்.

‘கே.ஜி.எஃப் 2’ என்பது ஒரு ப்ராண்ட் பெயராகிவிட்டதால் அதன் இரண்டாம் பாகத்தை மக்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் என்றேன். மேலும் அவரது ஆக்‌ஷன் படம் என்பதாலும் என்னுடைய படம் காதல் கதையைக் கொண்ட குடும்பப் படம் என்பதாலும் இரண்டு படங்களின் வசூலும் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று அவரிடம் கூறினேன்''.

இவ்வாறு ஆமிர் கான் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE