பழம்பெரும் பாடகி பி.சுசீலாவுடன் விக்ரம் சந்திப்பு

By செய்திப்பிரிவு

பழம்பெரும் பின்னணிப் பாடகி பி.சுசீலாவின் வீட்டுக்கு நடிகர் விக்ரம் நேரில் சென்று, அவரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

1950களில் தொடங்கி பிரபல பாடகியாக இருந்து வருபவர் பி.சுசீலா. தென்னிந்திய மொழிகளில் 50,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஐந்து முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதையும் வென்றுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விக்ரம், பி.சுசீலா வீட்டுக்குச் சென்று அவரை நேரில் சந்தித்து உரையாடியதாக சுசீலாவின் முகநூல் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பி.சுசீலாவின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

''அக்டோபர் மாதம் ஒரு நாள் சுசீலா அம்மா வீட்டிற்கு ஒரு போன் வந்தது. நடிகர் விக்ரமின் மேனேஜர் பேசினார். சுசீலாம்மாவின் தீவிர ரசிகர் விக்ரம் என்றும், தான் அவரைச் சந்திக்க விரும்புவதாகவும் கூறினார். அடுத்த நாள் மாலை வரலாம் என்று அம்மா கூறினார்.

மறுநாள் அம்மாவைப் பார்த்த மகிழ்ச்சி ஒரு பக்கம், பயம் கலந்த மரியாதை ஒரு பக்கம் சிறிது நேரம் விக்ரம் கனவுலகில் இருந்தார் என்றால் மிகையாகாது. சுசீலா அம்மா அத்தனை சகஜமாகப் பழகுவார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவர்களின் பாடல்கள் போலவே அவர்களின் பேச்சும் அத்தனை இனிமையாக இருக்கிறதே என்று வியந்தார்.

சுசீலா அம்மாவிடம் பல பாடல்கள் பற்றிப் பேசினார். அம்மா சில பாடல்கள் பாட அவரும் உடன் பாடினார். இன்றைய முன்னணிக் கதாநாயகர் விக்ரம் இத்தனை பணிவாக எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் அத்தனை அடக்கமாகப் பழகியது ஆச்சர்யப்படும் வகையில் இருந்தது. மனதிற்கு சந்தோஷமாகவும் இருந்தது. பத்து நிமிடம் அம்மாவைப் பார்த்துவிட்டுப் போகலாமென வந்தவர் 2 மணி நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு மனமில்லாமல் அவசர வேலையாய் கிளம்பிச் சென்றார்.

என் வாழ்க்கைக் கனவு நனவானது என்றும், அதற்கு அந்த ஆண்டவனுக்கு நன்றி என்றும் விக்ரம் கூறிவிட்டுச் சென்றார். அம்மாவுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் அடிக்கடி வருகிறேன் என்றும் விக்ரம் கூறிவிட்டுச் சென்றார்''.

இவ்வாறு அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE