பொங்கல் போட்டியிலிருந்து பின்வாங்கிய 'எதற்கும் துணிந்தவன்' - பின்னணி என்ன?

By செய்திப்பிரிவு

'எதற்கும் துணிந்தவன்' படம் பொங்கல் போட்டியிலிருந்து பின்வாங்கியுள்ளது

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிகின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியவுடன் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி காரைக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக நடந்துவந்த படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

'எதற்கும் துணிந்தவன்' வரும் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த சூர்யா ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் இதற்கான பின்னணி குறித்து விசாரித்தபோது, ''பொதுவாக சன் பிக்சர்ஸ் படங்களின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனமே கைப்பற்றி வருகிறது. அந்த வகையில் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் வெளியீட்டு உரிமையையும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இன்னொரு பக்கம் அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தைத் தமிழகத்தில் ஒருசில இடங்களில் ரெட் ஜெயன்ட் நிறுவனமே வெளியிடுவதால் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகிறது.

அதேபோல தெலுங்கில் சூர்யா படங்களுக்கென்று தனி மார்க்கெட் உள்ளது. தற்போது பொங்கலுக்கு ‘ஆர்ஆர்ஆர்’, ‘பீம்லா நாயக்’ உள்ளிட்ட பெரிய படங்கள் ஜனவரி மாதம் திரைக்கு வருவதால் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டும் தயாரிப்புத் தரப்பில் பட வெளியீட்டை ஒரு மாதம் தள்ளி வைக்கிறோம்'' எனப் பட வட்டாரத்தில் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE