நீண்ட எதிர்பார்ப்புக்குப் பின் வெளியான ‘ஸ்பைடர்மேன்’ ட்ரெய்லர்

By செய்திப்பிரிவு

மார்வெல் ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

2019ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்த பாகத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், திடீரென சோனி- மார்வெல் நிறுவனங்களுக்கிடையே காப்புரிமை தொடர்பான பிரச்சினை வந்து இரண்டு நிறுவனங்களும் பிரிவதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடந்த இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தற்போது 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படத்தை இரண்டு தரப்பும் சேர்ந்தே தயாரித்துள்ளன.

கடந்த ‘ஸ்பைடர்மேன்’ படங்களில் முக்கியப் பாத்திரங்களாக நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமீ உள்ளிட்ட அனைவருமே இந்தப் படத்திலும் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாகவே இப்படம் குறித்த தகவல்களை அதிகம் வெளியிடாமல் ரகசியம் காத்து வந்தது படக்குழு. இதனால் இப்படம் குறித்த ஊகங்களை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக தொடர்ந்து பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு இன்று (நவ.17) 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படத்தின் ட்ரெய்லரை மார்வெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே பெரும் வரவேற்பை இந்த ட்ரெய்லர் பெற்று வருகிறது. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் இந்த ட்ரெய்லர் உலக அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன் வெளியான டீசரில் 2004 ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்பைடர்மேன்’ இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடித்த டாக்டர் ஆக்டோபஸ் தோன்றி ஸ்பைடர்மேன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்திருந்தார். இந்த ட்ரெய்லரில் இதற்கு முன் வந்த அத்தனை ஸ்பைடர்மேன் படங்களின் வில்லன்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர். அதே நேரம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முந்தைய ஸ்பைடர்மேன்களான டோபி மேக்யூர் மற்றும் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் இந்த ட்ரெய்லரில் இடம்பெறவில்லை. எனவே ரசிகர்களின் நீண்ட நாள் ஊகம் உண்மையா பொய்யா என்பது படம் வந்த பிறகே தெரியவரும்.

'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படம் வரும் டிசம்பர் 17 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE