சொல்லி அடித்திருக்கிறார் சிவா: 'அண்ணாத்த' குறித்து ரஜினி பகிர்வு

‘அண்ணாத்த’ படம் உருவான விதம் குறித்து ரஜினி ‘ஹூட்’ செயலியில் பகிர்ந்துள்ளார்.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தைத் தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் ரஜினியுடன் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளி பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் ‘அண்ணாத்த’ படம் உருவான விதம் குறித்து ரஜினி ‘ஹூட்’ செயலியில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த ‘பேட்ட’ படம் வெளியான சமயத்தில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ வெளியானது. இரண்டுமே சூப்பர் ஹிட் ஆனது. இரண்டு படங்களுக்குமே மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு. ‘விஸ்வாசம்’ படத்தை நான் பார்க்கவேண்டும் என்று தயாரிப்பாளரிடம் பேசி அப்படத்தை நான் பார்த்தேன்.

படம் பார்க்கத் தொடங்கியபோதே இவ்வளவு பெரிய சூப்பர் ஹிட் ஆவதற்கு இந்தப் படத்தில் என்ன இருக்கிறது என்று நினைத்தவாறே இருந்தேன். படத்தின் க்ளைமாக்ஸ் நெருங்க நெருங்க படத்தின் கலரே மாறி, மிகவும் அற்புதமாக இருந்தது. சூப்பர் படம். என்னையே அறியாமல் கைதட்டி விட்டேன். உடனடியாக நான் சிவாவைச் சந்திக்க வேண்டும் என்று கூறினேன். சிவா என்னை வந்து பார்த்தார். அவரிடம் பேசிய உடனே அவரை எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அவருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு எனக்கு ஏதாவது கதை வைத்திருக்கிறீர்களா என்று கேட்டேன். உடனே அவர் “உங்களுக்கு ஹிட் கொடுப்பது ரொம்ப ஈஸி சார்” என்று சொன்னார். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. யாருமே என்னிடம் அப்படிச் சொன்னது கிடையாது.

மேலும் அவர் “முதலில் நல்ல கதையில் நீங்கள் இருக்க வேண்டும். ‘தளபதி’, ‘பாட்ஷா’, ‘படையப்பா’ உள்ளிட்ட நல்ல கதைகளில் நீங்கள் இருந்ததால்தான் அது சூப்பர் ஹிட். அதுமட்டுமின்றி நீங்கள் கிராமத்துக் கதாபாத்திரத்தில் நடித்து ரொம்ப நாள் ஆச்சு’’ என்றார். அவர் சொன்ன விதம் மிகவும் பிடித்திருந்தது. ஒரு நல்ல கதையுடன் வாருங்கள் என்றேன். எனக்கு ஒரு 15 நாட்கள் வேண்டும் என்று கேட்டவர் 20 நாட்களுக்குப் பிறகு கதையோடு வந்தார். அவர் கதையைச் சொல்லச் சொல்ல என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது. உடனடியாக அவர் கையைப் பற்றிப் பிடித்து இதை அப்படியே நீங்கள் படமாக எடுக்க வேண்டும் என்றேன். இதைவிட சூப்பராக எடுப்பேன் என்று பதிலளித்தார். சொன்ன மாதிரியே சொல்லி அடித்திருக்கிறார் சிவா''.

இவ்வாறு ரஜினி பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE