36 மணி நேரம் தொடர்ந்து நடித்த பிரபுதேவா: இயக்குநர் முகில் சுவாரஸ்யப் பகிர்வு

'பொன் மாணிக்கவேல்' படத்தின் க்ளைமாக்ஸ் படப்பிடிப்பின் போது பிரபுதேவா 36 மணி நேரம் தொடர்ந்து நடித்துக் கொடுத்ததாக இயக்குநர் முகில் பகிர்ந்துள்ளார்.

ஏ.சி.முகில் இயக்கியுள்ள 'பொன் மாணிக்கவேல்' படத்தில் காவல்துறை உதவி ஆணையராக நடித்துள்ளார் பிரபுதேவா. தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேலின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

நிவேதா பெத்துராஜ், மறைந்த இயக்குநர் மகேந்திரன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், 'பாகுபலி' பிரபாகர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்கிய விதம் குறித்து இயக்குநர் ஏ.சி.முகில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

படத்தின் க்ளைமாக்ஸில் அனைத்து நடிகர்களும் நடிக்க வேண்டியிருந்ததால் அனைவரிடமும் தேதி வாங்கி உறுதி செய்து விட்டு இரண்டு நாட்களில் முடிப்பதாக தீர்மானித்தோம். அப்போது பிரபுதேவா வேறொரு படத்துக்காக மொரிசீயஸ் செல்லவேண்டியிருந்தது. அதனால் அவர் ஒரு தேதி சொல்லிவிட்டார்.

ஆனால் அவர் சொன்ன தேதிக்கு முதல் நாள் தான் மற்ற நடிகர்களின் தேதி எங்களுக்கு கிடைத்தது. ஆனால் எங்களுக்கு இரண்டு நாட்கள் தேவை. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றோம். தயாரிப்பாளரும் அதற்கான செட் எல்லாம் போட்டு செலவு செய்திருந்தார். பிரபுதேவாவிடம் சென்று விஷயத்தை சொன்னோம். ஷூட்டிங் பணிகளை தொடங்குங்கள், பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

ஆனால் தொடர்ந்து இரவு பகலாக எப்படி வேலை செய்ய இயலும் என்று நினைத்தோம். ஆனால் ஷூட்டிங் தொடங்கியது தொடர்ந்து 36 நேரம் தொடர்ந்து பணிபுரிந்தோம்.

சாப்பிட கூட நேரம் இல்லை. அந்த 36 மணிநேரமும் தொடர்ந்து அவர் எங்களுக்காக நடித்துக் கொடுத்தார். அதன் பிறகே வெளிநாடு கிளம்பிச் சென்றார். அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பர்களும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

இவ்வாறு ஏ.சி.முகில் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE