வடிவேலு நேரில் அழைத்துப் பாராட்டினார்: ரெடின் கிங்ஸ்லி பேட்டி

By செய்திப்பிரிவு

வடிவேலு தன்னை நேரில் அழைத்துப் பாராட்டியதாக நடிகர் ரெடின் கிங்ஸ்லி கூறியுள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், வினய், அர்ச்சனா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'டாக்டர்'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்க, சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்தது. இப்படம் கடந்த அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் ரெடின் கிங்ஸ்லி நடித்தார். ஏற்கெனவே ‘கோலமாவு கோகிலா’, ‘நெற்றிக்கண்’ உள்ளிட்ட படங்களில் இவரது கதாபாத்திரம் ரசிக்கும்படி இருந்தாலும் ‘டாக்டர்’ படத்தில் இவரது கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு இவர் பேசும் வசனங்கள் சமூக வலைதளங்களில் மீம்களாக வலம் வருகின்றன. ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் கிங்ஸ்லி நடித்துள்ளார்.

இந்நிலையில் ‘தி இந்து’ ஆங்கில இணையதளத்துக்கு ரெடின் கிங்ஸ்லி அளித்துள்ள பேட்டியில் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''பார்வையாளர்களின் நாடித்துடிப்பை நெல்சன் அறிந்து வைத்திருக்கிறார். படத்துக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மக்கள் ரசிப்பார்கள் என்று எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், அது இந்த அளவுக்கு இருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. படத்தின் இறுதிக்கட்டப் பணிகளின்போது நிறைய காமெடிக் காட்சிகளை நெல்சன் வெட்ட வேண்டியிருந்தது. பிரபலமான அந்த மெட்ரோ காட்சியில் கூட சில காமெடிகள் இருந்தன. ஆனால் நெல்சன் அதைத் தவிர்த்துவிட்டார்.

நெல்சன் இயக்கத்தில் உருவாகவிருந்த ‘வேட்டை மன்னன்’ படத்தில் பிரதான காமெடியனாக நடிக்க ஒப்பந்தமானேன். ஆனால், அப்படம் நிறுத்தப்பட்டதால் என்னுடைய பழைய வேலைக்குத் திரும்பிச் சென்றுவிட்டேன். ஒவ்வொரு வருடமும் நெல்சன் என்னைத் தொலைபேசியில் அழைத்து அவருடைய படத்துக்காக என்னுடைய சமீபத்திய புகைப்படத்தை அனுப்பச் சொல்லிக் கேட்பார். எப்படியோ எனக்குள் ஒரு நடிகர் இருப்பதை அவர் தெரிந்து கொண்டிருக்கிறார்.

ஆனால், நடிகனாக நான் அங்கீகாரம் பெற்றதாக உணர்ந்தது வடிவேலு சாரைச் சந்தித்த போதுதான். ‘நாய் சேகர்’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க அவரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் அவரைச் சென்று சந்தித்தேன். என்னுடைய எல்லா காமெடிகளையும் பார்த்திருப்பதாகவும், நான் நன்றாக நடிப்பதாகவும் வடிவேலு சார் பாராட்டினார்''.

இவ்வாறு ரெடின் கிங்ஸ்லி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE