பா.ரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன்?

By செய்திப்பிரிவு

பா.ரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் அறிமுக டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது மூன்றாம் கட்டப் படப்பிடிப்புக்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

இப்படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்திலும், பிரபல மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் பிக் பாஸ் சீசன் 5 நிறைவடைந்ததும் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இவ்விரண்டு படங்கள் தவிர்த்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் கமல் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கமல் தரப்பிலிருந்து பா.ரஞ்சித்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர் உடனடியாக சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் வெற்றிமாறன், மகேஷ் நாராயணன் படங்களை முடித்துக் கொடுத்தப் பிறகே பா.ரஞ்சித் படத்துக்கான தேதிகளை கமல் ஒதுக்குவார் என்று கூறப்படுகிறது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘சார்பட்டா பரம்பரை’ படத்தைப் பார்த்த கமல் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE