'துப்பறிவாளன் 2' தத்தெடுத்த குழந்தை; மிஷ்கினை லண்டனுக்கு அழைத்துச் சென்றிருக்கக் கூடாது: விஷால் பேட்டி

By செய்திப்பிரிவு

'துப்பறிவாளன் 2' படம் நான் தத்தெடுத்த குழந்தை. மிஷ்கினை லண்டனுக்கு அழைத்துச் சென்றிருக்கக் கூடாது என்று விஷால் தெரிவித்துள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரிப்பு, நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'துப்பறிவாளன் 2'. லண்டனில் இதன் படப்பிடிப்பின்போது மிஷ்கின் - விஷால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகினார் மிஷ்கின்.

'துப்பறிவாளன் 2' படத்தைத் தானே இயக்கி, தயாரித்து, நடிக்கவுள்ளதாக விஷால் அறிவித்தார். ஆனால், இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.

இதனிடையே, 'எனிமி' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டார் விஷால். அப்போது அவரிடம் 'துப்பறிவாளன் 2' படம் தொடர்பாகக் கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு விஷால் அளித்த பதில்:

"ஜனவரியில் மீண்டும் 'துப்பறிவாளன் 2' படத்தைத் தொடங்கவுள்ளோம். ஏப்ரலில் படம் வந்துவிடும். அக்டோபரில் எனது உண்மையான கனவுப் படத்தைத் தொடங்கவுள்ளேன். அது எனது முதல் இயக்கமாக இருக்கும். 'துப்பறிவாளன் 2' படத்தைப் பொறுத்துவரை அநாதையாக விட்டுவிடக்கூடாது எனத் தத்தெடுத்த குழந்தை. அதில் நிறைய நடந்தன. அக்டோபரில் இயக்குநராக எனது பயணம் தொடங்கும்".

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

புதிய படமும் சொந்தத் தயாரிப்புதானா என்ற கேள்விக்கு விஷால், "கண்டிப்பாக. விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனமே ஒரு கோபத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான். வெறும் 10,000 ரூபாயைக் கையில் வைத்துக்கொண்டுதான் விஷால் ஃபிலிம் பேக்டரியை ஆரம்பித்தேன். VFF என்பது விஷால் ஃபிலிம் பேக்டரி அல்ல வெஞ்சன்ஸ் ஃபிலிம் பேக்டரி.

எனக்கு நடந்த துரோகங்களின் கோப்பைகளில்தான் இந்த நிறுவனத்தையே ஆரம்பித்தேன். இயக்குநர் தவறு செய்யும்போது அதைச் சரிசெய்ய வேண்டியது என் கடமை. 'துப்பறிவாளன் 2' படத்துக்கு மிஷ்கினை லண்டனுக்கு அழைத்துச் சென்றிருக்கக் கூடாது. அது என் தவறு. இங்கேயே படத்தை முடித்திருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE