இயற்கை அன்னை விரும்பிய தூய்மையான குழந்தை -புனித் ராஜ்குமார் மறைவுக்கு இயக்குநர் மிஷ்கின் இரங்கல்

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு இயக்குநர் மிஷ்கின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். நேற்று காலை பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தனது வீட்டின் உடற்பயிற்சி கூடத்தில் புனித் உடற்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கியதாக தெரிகிறது. இதையடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிற்பகல் 3 மணியளவில் புனித் ராஜ்குமார் உயிரிழந்தார். தகவலறிந்து மருத்துவமனை முன்பு திரண்ட ரசிகர்கள், கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

புனித் ராஜுகுமாரின் மறைவு இந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுது. பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு இயக்குநர் மிஷ்கின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:

புனித் ராஜ்குமாரின் மறைவுச் செய்தியை கேட்டு பெரும் அதிர்ச்சியடைந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு என்னை தொலைபேசியில் அழைத்த அவர் ஒரு படம் குறித்து பேசினார். நான் பெங்களூரு சென்று அவரிடம் ஒரு கதையை கூறினேன். அவருக்கு அது பிடிந்திருந்தது. எனினும் அதை படமாக உருவாகவில்லை. அந்த கதைக்கு பெரிய தேவை என்பதால் அதை படமாக்குவது சாத்தியமில்லை என்பதை அவர் வெளிப்படையாக கூறினார். என்னை பார்ப்பதற்காக தன்னுடைய பார்க்கிங் பகுதிக்கு இறங்கி வரும் அளவுக்கு பணிவான மனிதராக இருந்தார். நாங்கள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து பிரிந்து சென்றோம். விரைவில் ஒரு படம் பண்ணலாம் என்று உறுதியேற்றுக் கொண்டோம்.

அன்புள்ள புனித், நீங்க வெறும் சினிமா ஹீரோ மட்டுமல்ல, நீங்க ஒரு உண்மையான ஹீரோ. உங்கள் அன்பு, பணிவு, நேர்மை ஆகியவற்றால் உங்களுக்கு ஆயிரக்கணக்கான நண்பர்களும், ரசிகர்களும் கிடைத்துள்ளனர். இயற்கை அன்னை தனது மடியில் உங்களை தவழ வைக்க விரும்பிய தூய்மையான குழந்தை நீங்கள். எங்கள் வாழ்க்கை முழுவதும் உங்களை நாங்கள் மிஸ் செய்வோம் புனித்.

கண்ணீருடன்,
மிஷ்கின்

இவ்வாறு மிஷ்கின் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE