விஷால் மீண்டும் பேசி மாட்டிக் கொள்கிறார்; தேவையில்லாத குற்றச்சாட்டு: மிஷ்கின் காட்டம்

'துப்பறிவாளன் 2' சர்ச்சை தொடர்பாக விஷாலின் புதிய குற்றச்சாட்டுக்கு மிஷ்கின் காட்டமாக பதிலளித்துள்ளார்.

மீண்டும் மிஷ்கின் - விஷால் கூட்டணியில் உருவான படம் 'துப்பறிவாளன் 2'. விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரித்து வந்தது. இதன் படப்பிடிப்பின்போது மிஷ்கின் - விஷால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகினார் மிஷ்கின்.

அதனைத் தொடர்ந்து விஷாலே இயக்கி, நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மிஷ்கின் தொடர்பாக விஷால் விட்ட அறிக்கை மற்றும் விஷால் தொடர்பாக மிஷ்கினின் மேடைப் பேச்சு இரண்டுமே சர்ச்சையாக உருவெடுத்தது. அதற்குப் பிறகு இருவருமே 'துப்பறிவாளன் 2' பிரச்சினை தொடர்பாக அமைதி காத்து வந்தார்கள்.

இதனிடையே, 'வீரமே வாகை சூடும்' படத்தை விளம்பரப்படுத்தப் பேட்டி அளித்துள்ளார் விஷால். அதில் மிஷ்கின் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று விஷால் கூறியுள்ளார். மேலும், சில குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.

விஷாலின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மிஷ்கினிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

"முதலில் விஷால் என்னைத் தவறாகச் சித்தரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். கதையைக் கேட்டவுடன் கொடுத்தேன். அதைக் கொடுத்தவன், என் தம்பியைக் கொடுக்க மாட்டேனா. அவனும் நடித்தால் சம்பளம் கிடைக்குமே. எனக்குக் கொடுக்கப்பட்ட சம்பளத்துக்கு 35 லட்ச ரூபாய் வரை ஜி.எஸ்.டி கட்டவே இல்லை. ஆகையால் அதைக் கொடுடா என்றேன். நானும் எப்படித்தான் அவனிடம் பணத்தை வாங்குவது என்று சொல்லுங்கள். ஜி.எஸ்.டி கட்டிவிட்டு தம்பியை தாராளமாக அழைத்துச் செல்லுங்கள்.

'துப்பறிவாளன் 2' படத்தில் இணை இயக்குநராக லெனின் என்பவர் பணிபுரிந்தார். அவர் கனடாவைச் சேர்ந்தவர். அவரை மிகவும் தரக்குறைவாக நடத்தினார்கள். ஆகையால், அவர் அந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று ஊருக்குச் செல்லத் தயாரானார். அப்போது விஷாலுக்கு "அவன் ஊருக்குக் கிளம்புகிறான். அவனிடம் மன்னிப்பு கேட்டு இருக்கச் சொல்" என்று குறுந்தகவல் அனுப்பினேன். என்னை நம்பி வந்தவரை நான்தானே பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு "நான் முக்கியமா.. உதவி இயக்குநர் முக்கியமா" என்று விஷால் கேட்டான். உடனே உதவி இயக்குநர்தான் முக்கியம் என்றேன். அவன் சொல்வது உண்மையா, நான் சொல்வது உண்மையா என்பது பிரசன்னாவுக்குத் தெரியும்.

என்னை ஏன் தவறாகச் சித்தரிக்கிறார் என்றே தெரியவில்லை. அவர் பேசிவிட்டார், நானும் பேசி முடித்துவிட்டேன். விஷால் மீண்டும் பேசி மாட்டிக் கொள்கிறார். என் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஊரில் அவனைத் தவிர்த்து என்னுடன் படம் பண்ண ஆளே இல்லையா என்ன?"

இவ்வாறு மிஷ்கின் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE