அரசு மருத்துவமனை விவகாரம்; ஜோதிகா பேச்சுக்குப் பிறகு மாற்றங்கள் வந்திருக்கின்றன: சூர்யா பேட்டி

அரசு மருத்துவமனை விவகாரம் தொடர்பாக ஜோதிகா பேசியதற்குப் பிறகு மாற்றங்கள் வந்திருக்கின்றன என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் நவம்பர் 2-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

'ஜெய் பீம்' படத்தை விளம்பரப்படுத்த இணையம் வழியே பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் சூர்யா. அப்போது, "வழக்கமான படங்கள் எடுக்கும்போது வரும் விமர்சனங்கள் வேறு. ஆனால் சித்தாந்த ரீதியாக, சமூக சிந்தனை சொல்லும் படங்கள் எடுக்கும்போது அதற்கான விமர்சனங்கள் தனிப்பட்ட முறையில் வரும். ஏற்கெனவே செல்போன் பிரச்சினையில் சிவகுமாரும், தஞ்சாவூர் சர்ச்சையில் ஜோதிகாவும் சிக்கினர். இப்படியான தனிப்பட்ட தாக்குதல்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளிக்கும் விதமாக சூர்யா கூறியிருப்பதாவது:

"இது யாரையும் புண்படுத்த, வருத்தப்படவைக்க எடுத்த படம் கிடையாது. உங்களுக்கு அப்படித் தெரிகிறதா என்றும் எனக்குத் தெரியவில்லை. இது நம் மக்களைச் சார்ந்த, மண் சார்ந்த படம். ஒரு குறிப்பிட்ட மக்கள் பற்றித் தெரியாமலேயே இருந்திருக்கிறோம் என்பதைச் சொல்லி நம்மைச் சிந்திக்க வைக்கும் படம். நம்முடனே வாழ்பவர்கள் மீதான அக்கறை இல்லாமல் நாம் எப்படி இருந்திருக்கிறோம் என்பதைச் சொல்லும் படம். ஒரு படம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் என் எண்ணம். படங்களுக்கு வரும் விமர்சனங்களுக்குச் சரிசமமாக அன்பும் பெற்றிருக்கிறேன். இதுதான் உண்மை.

ஆயிரம் பூமாலைகளுக்கு நடுவில் ஒரு செருப்பு மாலை வரும்போது அதை நினைத்து ஏன் வருத்தப்பட வேண்டும்? ஒவ்வொருவருமே அவர்களின் வாழ்வில் ஒரு கட்டத்தில் இருக்கிறார்கள். அது வருத்தமான, வலி மிகுந்த சூழலாக இருக்கலாம். அங்கிருந்து பார்க்கும்போது வித்தியாசமாகத் தெரியலாம். அது அவர்கள் பார்வையில் நியாயமாகத் தெரியலாம். நாம் அவர்களைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். அவர்கள் மீது வருத்தப்படுவதோ, கோபம் கொள்வதோ அவசியம் இல்லை. காலப்போக்கில் நம் நோக்கம் என்ன என்பது எல்லோருக்கும் புரியவரும் என்பது என் நம்பிக்கை.

ஜோதிகா பேசியதற்குப் பிறகு நிறைய நடந்தன. ஆனால் நாங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தே இருந்தோம். ஏன் பேசினோம், எதற்காகப் பேசினோம் என்ற உண்மை எங்களுக்குத் தெரியும் என்பதால் அதோடு நிற்கலாம் என்றே இருந்தோம். அந்தப் பொறுமை நல்ல விளைவுகளையும் மாற்றங்களையும் கொண்டுவந்தது. இப்போது அந்த மருத்துவமனையைப் பார்க்கவே அழகாக இருக்கிறது. மாற்றங்கள் வந்திருக்கின்றன.

எனவே எல்லாம் காலப்போக்கில் புரியவரும். அதற்காக வாதாட வேண்டாம் என்பது எங்கள் நம்பிக்கை. உங்கள் நோக்கமும் சிந்தனையும் உண்மையாக இருக்கும்போது மக்களைச் சமாதானப்படுத்த வாக்குவாதத்தில் இறங்க வேண்டியதில்லை".

இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE