'அண்ணாத்த' பார்த்து பேரன் குஷி: ரஜினிகாந்த் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

'அண்ணாத்த' பார்த்துவிட்டு பேரன் வேத் கிருஷ்ணா குஷியானது தொடர்பாக ரஜினிகாந்த் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அண்ணாத்த'. நவம்பர் 4-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிடுகிறது.

நேற்று (அக்டோபர் 27) மாலை 'அண்ணாத்த' படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதனிடையே, தனது குடும்பத்தினருடன் 'அண்ணாத்த' படத்தைப் பார்த்துள்ளார் ரஜினிகாந்த். 'அண்ணாத்த' படத்தைப் பார்த்துவிட்டு தனது பேரன் வேத் கிருஷ்ணா அடைந்த மகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார் ரஜினிகாந்த்.

அதில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:

" 'அண்ணாத்த' டீஸர் வெளியானதிலிருந்து எனது 3-வது பேரன் வேத், படத்தை எப்போது காண்பிப்பீர்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தான். அவனுக்கு 6 வயதாகிறது. ஒரு நாளைக்கு 15-20 முறையாவது கேட்டுவிடுவான். இன்னும் ரெடியாகவில்லை என்றால் ஏன் ரெடியாகவில்லை என்று கேட்டுக் கொண்டிருப்பான். இவனுக்காகவே நான் இயக்குநர் சிவாவிடம் சீக்கிரம் படத்தைக் காண்பியுங்கள், பேரன் கேட்டுக்கொண்டே இருக்கிறான் என்றேன்.

நீங்கள் டெல்லிக்குப் போய்விட்டு வந்தவுடன் காட்டுகிறேன் என்றார். 27-ம் தேதி சன் நெட்வொர்க் அலுவலகத்தில் படத்தைத் திரையிடுவதாகச் சொல்லியிருந்தார்கள். எனது முதல் இரண்டு பேரன்கள் யாத்ராவும், லிங்காவும் அப்பா தனுஷுடன் கொடைக்கானலில் படப்பிடிப்பில் இருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டுப் படம் பார்த்தால் ரகளையாகிவிடும். ஆகையால், சொல்ல வேண்டாம் எனச் சொல்லிவிட்டேன்.

நான், ஐஸ்வர்யா, செளந்தர்யா, மாப்பிள்ளை விசாகன், சம்பந்திகள் என அனைவரும் 'அண்ணாத்த' படம் பார்த்தோம். எனக்கு அருகிலேயே உட்கார்ந்து படம் பார்க்க வேண்டும் என நினைத்து, வேத் உட்கார்ந்து கொண்டான். நான் நடித்த படங்களில் அவன் திரையரங்கில் பார்க்கும் முதல் படம் இது. முழுப் படத்தையும் அவ்வளவு ரசித்துப் பார்த்தான். படம் முடிந்தவுடன் என்னைக் கட்டியணைத்து 3-4 நிமிஷம் விடவே இல்லை. அவனுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டால் "தாத்து தாத்து" என்று சொல்வான். "தாத்து ஐ யம் ஸோ ஹாப்பி, தேங்க் யூ" என்று சொன்னான். எனக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது.

இரவு 10 மணிக்கு மேல் திரையரங்கை விட்டு வெளியே வந்தேன். எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் கலாநிதி மாறன் சார் வெளியே நின்றார். "என்ன சார், இந்த நேரத்தில் நீங்கள் வந்துள்ளீர்கள்" என்றேன். "இல்லை உங்களைப் பார்க்க வேண்டும் அல்லவா" என்றார். அவ்வளவு பிஸியான மனிதர், நிற்க வேண்டிய அவசியமில்லை. எப்போதுமே மேன்மக்கள், மேன்மக்களே".

இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் மகன் பெயர் வேத் கிருஷ்ணா என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE