இப்போதுதான் வெற்றியை நோக்கிய பயணம் தொடங்கியிருக்கிறது: பார்த்திபன் உற்சாகம்

By செய்திப்பிரிவு

இப்போதுதான் வெற்றியை நோக்கிய எனது பயணம் தொடங்கியிருக்கிறது என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்திருந்த 'ஒத்த செருப்பு' படத்துக்குச் சிறந்த நடுவர் தேர்வு விருது வழங்கப்பட்டது. பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள 'ஒத்த செருப்பு' படத்துக்கு, இந்த தேசிய விருது மேலும் பெருமை சேர்த்துள்ளது.

தனது படத்துக்கு தேசிய விருது கிடைத்திருப்பதற்கு, பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் பார்த்திபன். அதில் தனது அடுத்த படங்கள் குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.

பார்த்திபன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

”என் தோல்விப் படங்கள், என்னுடைய வெற்றிப் படங்களைக் கணக்கிட்டால் வர்த்தக ரீதியாக எனது தோல்விப் படங்களே அதிகமாக இருக்கும். ஆனால், அதிலும் நான் ஏதாவது 'குடைக்குள் மழை' போல், சிறிய அளவிலாவது புதிய முயற்சிகளைச் செய்திருப்பேன். ஒத்தையடிப் பாதையிலிருந்து 'ஒத்த செருப்பு' வரை என்னுடைய பயணத்தை மிக இலகுவான நெடுஞ்சாலைப் பயணமாக்கியதில் பத்திரிகையாளர்களின் பங்கே அதிகம்.

சில நேரங்களில் என் படங்கள் ரசிகர்களுக்குப் பிடிக்காமல் போகும் காலங்களில் கூட, எனக்குப் பத்திரிகைகள் ஊக்கம் தந்திருக்கின்றன. எனது முயற்சிகளைப் பாராட்டியுள்ளன. தற்போது தேசிய விருது வாங்கும் அளவிலான படத்தைச் செய்வதற்கு என் தோளோடு தோளாக, உடனிருந்து உற்சாகப்படுத்தியது அவர்கள்தான். இப்போதுதான் வெற்றியை நோக்கிய எனது பயணம் தொடங்கியிருக்கிறது.

ஒவ்வொரு படமும் செய்யும்போது அதை எனது இறுதிப் படமாகவே நினைத்துச் செய்வேன். எனது முழு உழைப்பையும் அதற்குத் தருவேன். தேசிய விருது முதல் ஆஸ்கர் விருது வரை அப்படம் வெல்ல வேண்டும் என முயல்வேன். அம்மாதிரியான முயற்சிகளில் பத்திரிகை தரும் பாராட்டு பெரும் மகிழ்ச்சியைத் தரும். இம்மாதிரி முயற்சிகளை நான் தொடர்ந்து செய்துகொண்டிருப்பேன்.

அப்படியான எனது அடுத்த முயற்சிதான் 'இரவின் நிழல்'. நான் படத்தைப் பார்த்துவிட்டேன். அதற்கு அடுத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பார்த்துவிட்டு, பிரமித்துப் பாராட்டினார். இப்போது இசையமைக்க ஆரம்பித்துள்ளார். இதன் முதல் பிரதியை முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே ஆசைப்படுகிறேன்.

அடுத்து 'ஒத்த செருப்பு' படத்தை இந்தியில் அமிதாப் பச்சன் தயாரிப்பில், அபிஷேக் பச்சனை நாயகனாக வைத்து இயக்கியுள்ளேன். 'இரவின் நிழல்' படத்தை உங்களுக்குத்தான் முதலில் காட்ட விரும்புகிறேன். 'ஒத்த செருப்பு'க்கு இன்னும் எத்தனை பெருமைகள் கிடைத்தாலும் அது உங்களையே சாரும்".

இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE