'வெந்து தணிந்தது காடு' அப்டேட்: முன்னணி ஹாலிவுட் சண்டை இயக்குநர் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

'வெந்து தணிந்தது காடு' படத்தில் முன்னணி ஹாலிவுட் சண்டை இயக்குநர் லீ விட்டேகர் பணிபுரிந்துள்ளார்.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வெந்து தணிந்தது காடு'. வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகளை தற்போது மும்பையில் படமாக்கி வருகிறது படக்குழு. இதில் சண்டைக் காட்சி ஒன்றை இயக்கியுள்ளார் லீ விட்டேகர்.

'பாஸ்ட் அண்ட் ஃபுரியஸ் 5', 'தி ஸ்பை நெக்ஸ்ட் டோர்' உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் படங்களின் சண்டைக் காட்சிகளில் பணிபுரிந்தவர் லீ விட்டேகர். 'பாகுபலி', 'பாகுபலி 2', 'விஸ்வரூபம்', 'ஆரம்பம்' உள்ளிட்ட படங்களிலும் பணிபுரிந்துள்ளார். தற்போது 'வெந்து தணிந்தது காடு' படத்தின் சண்டைக் காட்சிகளில் பணிபுரிந்துள்ளார்.

மும்பை படப்பிடிப்பை முடித்துவிட்டு லீ விட்டேகர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"நேற்றிரவு மும்பையில் நடந்த படப்பிடிப்போடு முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்தது. கெளதம் மேனனோடு அதீத திறமை வாய்ந்த நடிகர்களோடும், இந்தச் சிறப்பான குழுவோடும் பணியாற்றியது அற்புதமான, நேர்மறை சிந்தனையூட்டும் அனுபவமாக இருந்தது. இந்த இனிய மனிதர்களுடன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை எதிர்நோக்கியுள்ளேன். மிக்க நன்றி"

இவ்வாறு லீ விட்டேகர் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் கதையினை ஜெயமோகன் எழுதியுள்ளார். இதில் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சிலம்பரசனுக்கு நாயகியாக கயடு லோஹர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியராக தாமரை ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE