தாதா சாகேப் பால்கே விருதினை எதிர்பார்க்கவே இல்லை: ரஜினிகாந்த்

By செய்திப்பிரிவு

தாதா சாகேப் பால்கே விருதினை எதிர்பார்க்கவே இல்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, ஷியான் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகிலிருந்து சிவாஜி, கே.பாலசந்தர் ஆகிய இருவர் இந்த விருதினைப் பெற்றுள்ளார்கள்.

2019-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்த்துக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு திரையுலகினரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விழா நடத்தப்படாமல் இருந்தது.

தற்போது டெல்லியில் நாளை (அக்டோபர் 25) நடைபெறும் விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு டெல்லிக்கு இன்று பயணிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.

இதனால் தனது இல்லத்தில் பத்திரிகையாளர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசியதாவது:

"தாதா சாகேப் பால்கே விருது எனக்குக் கிடைத்திருப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. இந்த நேரத்தில் கே.பாலசந்தர் சார் இல்லையே என்று வருத்தமாக உள்ளது. இந்த விருது கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. அதை நான் எதிர்பார்க்கவே இல்லை"

இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.

நாளை நடைபெறும் விழாவில் 2019-ம் ஆண்டிற்கான தேசிய விருதுகளும் வழங்கப்படவுள்ளன. இதில் ’அசுரன்’ படத்துக்காக சிறந்த நடிகராக தனுஷ், ’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதி சிறந்த உறுதுணை நடிகர், பார்த்திபன் இயக்கத்தில் உருவான ’ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படத்துக்கு சிறப்பு நடுவர் தேர்வு விருது, ’கேடி (எ) கருப்புதுரை’ படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது, இசையமைப்பாளர் டி.இமானுக்கு, ’விஸ்வாசம்’ படத்துக்காக, சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) விருது ஆகியவையும் வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE