பிரதமருக்குக் கோரிக்கை விடுத்த சுதா சந்திரன்: மன்னிப்பு கோரியது மத்திய பாதுகாப்புப் படை

By செய்திப்பிரிவு

பிரதமருக்குக் கோரிக்கை விடுத்து சுதா சந்திரன் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், மத்திய பாதுகாப்புப் படை மன்னிப்பு கோரியுள்ளது.

திரையுலகம், தொலைக்காட்சி ஆகியவற்றில் தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வருபவர் சுதா சந்திரன். இவர் பிரபல பரதநாட்டியக் கலைஞர். தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிகளில் பணிபுரிந்து வருகிறார். திருச்சியில் நடந்த விபத்து ஒன்றில், தனது காலை இழந்தார். பின்பு செயற்கைக் கால் பொருத்தி மீண்டும் நடிப்பு, நடனம் எனத் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது விமான நிலையத்தில் நடத்தப்படும் சோதனைகள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சுதா சந்திரன்.

அந்த வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

"மாலை வணக்கம், நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு இது எனது தனிப்பட்ட கடிதம். மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை. நான் சுதா சந்திரன், நான் ஒரு நடிகை, நாட்டியக் கலைஞர். செயற்கைக் கால்களைக் கொண்டு நடனமாடி வரலாறு படைத்திருக்கிறேன். எனது நாடு என்னை நினைத்துப் பெருமிதம் கொள்ளுமாறு செய்திருக்கிறேன்.

ஆனால், தொழில்முறைப் பயணமாக நான் ஒவ்வொரு முறை விமானம் ஏறுவதற்கு முன்பும், விமான நிலையத்தில் என்னைப் பாதுகாப்பு சோதனையில் தடுத்து நிறுத்தும்போது எனது செயற்கைக் காலை வெடிகுண்டு பரிசோதனைக் கருவியை வைத்துப் பரிசோதிக்கும்படி மத்திய பாதுகாப்புப் படையினரிடம் கேட்கிறேன். ஆனால், அவர்கள் எனது செயற்கைக் காலை நீக்கிக் காட்டச் சொல்கின்றனர்.

மோடி அவர்களே, ஒவ்வொரு முறையும் சாத்தியப்படும் மனிதச் செயல்தானா இது? இதுதான் நமது தேச பக்தி எண்ணமா? இந்தச் சமூகத்தில் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்குத் தரும் மரியாதை இதுதானா? மோடி அவர்களே, மூத்த குடிமக்கள், அவர்கள் மூத்தவர்கள்தான் என்பதைத் தெரிவிக்கும் வண்ணம் ஒரு அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு சுதா சந்திரன் தெரிவித்துள்ளார்.

சுதா சந்திரனின் வீடியோ பதிவு பெரும் வைரலானது. இதனைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்புப் படை மன்னிப்பு கோரியுள்ளது.

இது தொடர்பாக மத்திய பாதுகாப்புப் படை ட்விட்டர் பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:

"உங்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு மிகவும் வருந்துகிறோம் சுதா சந்திரன். விதிமுறைகளின் படி, குறிப்பிட்ட சில சமயங்களில் மட்டுமே பிராஸ்தடிக்ஸ் பாகங்களை நீக்கிப் பரிசோதிக்க வேண்டும். உங்களை ஏன் அப்படிச் செய்யச் சொன்னார் என்று குறிப்பிட்ட பெண் அதிகாரியை நாங்கள் விசாரிக்கிறோம். பயணப்படும் எந்தப் பயணிக்கும் அசவுகரியம் ஏற்படாது இருக்க ஊழியர்களுக்கு எங்கள் விதிமுறைகள் குறித்து மீண்டும் வலியுறுத்துவோம் என்று உறுதி கூறுகிறோம்."

இவ்வாறு மத்திய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE