பல நூற்றாண்டுகளாக இந்துக்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகளை நீங்கள் உணர்வீர்கள்: டயர் நிறுவனத்துக்கு பாஜக எம்.பி. கடிதம்

தீபாவளி பட்டாசுகள் குறித்த சர்ச்சையான விளம்பரம் ஒன்றை வெளியிட்ட தனியார் டயர் நிறுவனத்துக்கு கர்நாடக பாஜக எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பிரபல தனியார் டயர் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. அந்த விளம்பரத்தில் தோன்றிய பாலிவுட் நடிகர் ஆமிர் கான், ‘சாலைகள் பட்டாசு வெடிப்பதற்காக அல்ல, சாலைகள் கார்களுக்காக’ என்ற ஒரு வசனத்தைப் பேசியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் ஆமிர் கானுக்கும், அந்த டயர் நிறுவனத்துக்கும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கர்நாடக பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''மசூதிகளில் பாங்கு சொல்லி ஒலி மாசு ஏற்படுவது குறித்தும், தொழுகை என்ற பெயரில் சாலைகளை மறிப்பது குறித்தும் உங்கள் நிறுவனம் சுட்டிக்காட்ட வேண்டும். பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து உங்களுக்கு ஆர்வம் இருப்பதாலும், நீங்கள் ஒரு இந்துவாக இருப்பதாலும், பல நூற்றாண்டுகளாக இந்துக்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகளை நீங்கள் உணர்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இந்துக்களுக்கு எதிரான நடிகர்கள் குழு ஒன்று எப்போதும் இந்துக்களின் நம்பிக்கையைப் புண்படுத்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் தங்கள் சமூகத்தில் இருக்கும் தவறுகளைப் பற்றிப் பேசுவதில்லை.

சமீபத்தில் ஆமிர் கான் தெருக்களில் பட்டாசு வெடிப்பது குறித்து அறிவுரை வழங்கும் உங்கள் விளம்பரத்தில் நல்ல மெசேஜ் இருக்கிறது. பொதுமக்களின் பிரச்சினைகள் மீதான உங்கள் அக்கறைக்குப் பாராட்டுகள். ஆனால், இதேபோல சாலைகளில் பொதுமக்கள் சந்திக்கும் இன்னொரு பிரச்சினையையும் நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அது வெள்ளிக்கிழமை மற்றும் இதர விழா நாட்களில் தொழுகையின் பெயரில் முஸ்லிம்களால் சாலைகள் மறிக்கப்படுவது.

பல இந்திய நகரங்களில் முஸ்லிம்கள் பிஸியான சாலைகளை மறித்து தொழுகை நடத்துவது மிகவும் பொதுவான ஒன்று. அந்த நேரத்தில் வாகனங்கள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வீரர்கள் என அனைவரும் நெரிசலில் சிக்குவதால் மிகப்பெரிய இழப்புகள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு நாளும், மசூதிகளின் மேல் அமைக்கப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகளில் இருந்து பாங்கு சொல்லும்போது பெரும் இரைச்சல் உருவாகிறது. அந்தச் சத்தம் அனுமதிக்கப்பட்ட அளவீட்டைத் தாண்டி இருக்கிறது. வெள்ளிக்கிழமைகளில் மசூதிகளில் தொழுகை நீண்ட நேரம் நடக்கிறது. இது உடல்ரீதியாக பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய சிரமத்தைக் கொடுக்கிறது. உங்கள் நிறுவனத்தின் விளம்பரம் இந்துக்களிடையே அமைதியின்மையை உருவாக்கிய இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தை கவனத்தில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்''.

இவ்வாறு அனந்த்குமார் ஹெக்டே கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE