ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் ‘மண்டேலா’

By செய்திப்பிரிவு

ஆஸ்கர் விருதுக்கான இந்தியப் பரிந்துரை தேர்வுக்கு யோகி பாபு நடித்த ‘மண்டேலா’ படம் அனுப்பப்பட்டுள்ளது.

மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகிய படம் 'மண்டேலா'. ஒய் நாட் ஸ்டுடியோஸ் வழங்க பாலாஜி மோகன் தயாரித்திருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, பின்பு ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் 'மண்டேலா' திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஆண்டுதோறும் இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்கு ஒரு திரைப்படம் அனுப்பப்படும். இதற்காக தேசிய அளவில் பல மொழித் திரைப்படங்கள் போட்டி போடும். அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியா சார்பாக வித்யா பாலன் நடித்த ‘ஷெர்னி’, விக்கி கவுஷல் நடித்த ‘சர்தார் உதம்’, மலையாளத்தில் மார்ட்டின் ப்ரகத் இயக்கிய ‘நாயாட்டு’, உள்ளிட்ட 14 படங்கள் போட்டி போடுகின்றன. இதில் ‘மண்டேலா’ படமும் இடம்பெற்றுள்ளது.

இயக்குநர் ஷாஜி என். கருண் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு இப்படங்களை பார்த்து, அதிலிருந்து ஒரு படத்தைத் தேர்வு செய்து இந்தியாவின் ஆஸ்கர் பரிந்துரையாக அனுப்பும். கடந்த வருடம் இந்தியா சார்பாக போட்டியிட்ட 'கல்லி பாய்' திரைப்படம் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE