பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற கர்ணன்

By செய்திப்பிரிவு

பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில், 'கர்ணன்' படம் விருதினை வென்றுள்ளது.

தாணு தயாரிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'கர்ணன்'. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், யோகி பாபு, ராஜிஷா விஜயன், நட்ராஜ், கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

'கர்ணன்' படத்தின் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், எடிட்டராக ஆர்.கே செல்வா, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்திருந்தனர். மேலும், இந்தப் படத்தினை பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது படக்குழு.

தற்போது பெங்களூரு இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் 'கர்ணன்' திரையிடப்பட்டது. 20 நாடுகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட படங்கள், 30 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்துத் திரையிடப்பட்டது. இதன் நிறைவு விழாவில் 'கர்ணன்' திரைப்படத்துக்கு விருது வழங்கப்பட்டது.

இதில் 'இந்திய சினிமாவின் சிறந்த இயக்கத்துக்கான திரைப்படம்' என்ற மாபெரும் விருதினை வென்றார் 'கர்ணன்' இயக்குநர் மாரி செல்வராஜ். இந்த விருதினை இயக்குநர் செல்வமணி, மாரி செல்வராஜுக்கு வழங்கினார்.

'கர்ணன்' படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள புதிய படத்தினை இயக்கவுள்ளார் மாரி செல்வராஜ். இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE