‘மா’ அமைப்பு குறித்த சர்ச்சை கருத்து: ராம் கோபால் வர்மா -  மனோஜ் மஞ்சு இடையே முற்றிய வார்த்தைப் போர்

By செய்திப்பிரிவு

இயக்குநர் ராம் கோபால் வர்மா மற்றும் நடிகர் மனோஜ் மஞ்சு இருவரும் ட்விட்டரில் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் தெலுங்குத் திரையுலகின் நடிகர்கள் சங்கமான மா அமைப்பின் தேர்தல் நடந்தது. இதில் விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணி வெற்றி பெற்றது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் தலைமையிலான அணி தோல்வியைத் தழுவியது. இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட சர்ச்சையை முன்வைத்து பிரகாஷ்ராஜ், மா அமைப்பின் உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். மேலும், பிரகாஷ்ராஜ் அணியிலிருந்து வெற்றி பெற்ற உறுப்பினர்கள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தார்கள்.

இந்த சூழலில் வழக்கமாக அவ்வப்போது சர்ச்சைக் கருத்துகளை பகிர்ந்து விமர்சனத்துக்கு ஆளாகும் இயக்குநர் ராம் கோபால் வர்மா மா அமைப்பை மறைமுகமாக குறிப்பிட்டு ‘சினி‘மா’ கொமாளிகள் நிறைந்த ஒரு சர்க்கஸ்’ என்று ட்வீட் செய்திருந்தார். இது தெலுங்கு நடிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.

ராம் கோபால் வர்மாவின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் மோகன் பாபுவின் மகனும், விஷ்ணு மஞ்சுவின் சகோதரருமான மனோஜ் மஞ்சு தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நீங்கள் தான் அதன் ரிங் மாஸ்டர்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ராம் கோபால் வர்மா ‘முட்டாள்கள் ஏன் மிகவும் வெற்றிகரமானவர்கள் என்று பல அறிவாளிகள் அடிக்கடி ஆச்சரியப்படுவதுண்டு. அதற்கு காரணம் உண்மையில் அறிவாளிகள் தாங்கள் முட்டாள்கள் என்று உணராத முட்டாள்கள். எனவே அவர்களால் அறிவாளிகளை புரிந்து கொள்ளமுடியாது. நான் மேற்சொன்ன கருத்து உங்களுக்கு புரியவில்லை என்றால் நீங்களும் ஒரு முட்டாளே’ என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE