’மெட்டி ஒலி’ புகழ் உமா மகேஸ்வரி காலமானார்

By செய்திப்பிரிவு

'மெட்டி ஒலி' தொடரின் புகழ் உடம் மகேஸ்வரி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 40.

சன் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர்களில் ஒன்று 'மெட்டி ஒலி'. திருமுருகன் இயக்கத்தில் உருவான இந்த தொடரில் டெல்லி குமார், திருமுருகன், காவேரி, காயத்ரி, போஸ் வெங்கட், சஞ்சீவி, உமா மகேஸ்வரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2002-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை இந்த தொடர் ஒளிபரப்பானது. இப்போதும் இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தத் தொடரில் சிதம்பரத்தின் 4-வது மகளாக நடித்திருந்தவர் உமா மகேஸ்வரி.

இந்தத் தொடரின் வெற்றிக்குப் பிறகு 'வெற்றிக் கொடி கட்டு', 'உன்னை நினைத்து', 'அல்லி அர்ஜுனா' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், 'ஒரு கதையின் கதை', 'மஞ்சள் மகிமை' உள்ளிட்ட தொடர்களிலும் உமா மகேஸ்வரி நடித்துள்ளார்.

இவருடைய கணவர் முருகன் கால்நடை மருத்துவராக இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு எந்தவொரு தொடரிலும் நடிக்காமல், குடும்ப வாழ்க்கையைக் கவனித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்னால் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார். அதற்குச் சிகிச்சை எடுத்துக் குணமானார். பின்பு மீண்டும் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது.

இதற்குத் தொடர்ச்சியாகச் சிகிச்சை எடுத்து வந்தார். இன்று (அக்டோபர் 17) காலை திடீரென்று மரணமடைந்தார். முருகன் - உமா மகேஸ்வரி தம்பதியினருக்குக் குழந்தை கிடையாது. உமாவின் மறைவு சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE