பெங்களூரு இன்னோவேட்டிவ் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘கட்டில்’ திரையிடல் 

By செய்திப்பிரிவு

பெங்களூரு இன்னோவெட்டிவ் சர்வதேசத் திரைப்பட விழாவில் இ.வி.கணேஷ்பாபு இயக்கி, நடித்த ‘கட்டில்’ திரைப்படம் திரையிடப்பட்டது.

நடிகர், இயக்குநர், கவிஞர் எனப் பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் இ.வி.கணேஷ்பாபு. தமிழ் சினிமாவில் ‘ஆட்டோகிராஃப்’, ‘கற்றது தமிழ்’, ‘சிவகாசி’, ‘அறை எண் 305-ல் கடவுள்’, ‘ஆனந்தபுரத்து வீடு’,‘மொழி’ உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் தனித்துவப் பாணியில் முத்திரை பதித்துள்ளார்.

சத்யா, ஸ்ரீரம்யா, வினோதினி, ஆடுகளம் நரேன் நடிப்பில் ‘யமுனா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இ.வி.கணேஷ்பாபு. எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதை, வசனம் எழுத ‘கட்டில்’ படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்துள்ளார். சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்துள்ளார். ஓவியர் ஷ்யாம், எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், இயக்குநர் கே.பாலசந்தரின் மருமகள் கீதா கைலாசம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘கட்டில்’ திரைப்படம் பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடத் தேர்வாகியுள்ளது. பெங்களூரு இன்னோவேட்டிவ் சர்வதேசத் திரைப்பட விழாவில் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த படங்கள் திரையிடப்பட்டன. இதில் நேற்று 'கட்டில்' திரைப்படம் திரையிடப்பட்டது.

இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி மக்களும், 10க்கும் மேற்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த தூதரக உயர் அதிகாரிகளும் குடும்பத்துடன் ‘கட்டில்’ படத்தைப் பார்த்து ரசித்ததாக இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘கட்டில்’ திரைப்படம் குறித்து தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் சிறப்பிதழை உருவாக்கியுள்ளார் இயக்குநர் கணேஷ்பாபு. இதன் ஆங்கிலச் சிறப்பிதழ் பெங்களூரு சர்வதேசத் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, பேரரசு, சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோர் இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE