'ஆர்டிகிள் 15' தமிழ் ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் 'ஆர்டிகிள் 15' தமிழ் ரீமேக்கின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

அனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்து வெளியான படம் 'ஆர்டிகிள் 15'. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் தயாராகி வருகிறது.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது இந்தப் படத்தின் தலைப்புடன் கூடிய மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தப் படத்துக்கு 'நெஞ்சுக்கு நீதி' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதன் மோஷன் போஸ்டரில் படத்தின் சின்ன சின்ன காட்சிகளுடன், 'ஜாதி ஜாதி ஜாதி' என்ற பாடலும் இடம்பெற்றுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய 'நெஞ்சுக்கு நீதி' என்ற சுய வரலாற்று நூல் மிகவும் பிரபலம். ஆறு பாகங்களாக இந்நூல் வெளியானது. தாத்தா எழுதிய புத்தகத்தின் தலைப்பையே தன் படத்தின் தலைப்பாக வைத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி, சிவாங்கி உள்ளிட்ட பலர் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன், இசையமைப்பாளராக திபு நினன் தாமஸ், கலை இயக்குநர்களாக வினோத் ராஜ்குமார், லால்குடி இளையராஜா, எடிட்டராக ரூபன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

'நெஞ்சுக்கு நீதி' படத்தை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE