நெடுமுடி வேணு மறைவு: கமல், ஷங்கர் இரங்கல்

By செய்திப்பிரிவு

நெடுமுடி வேணு மறைவுக்கு கமல், ஷங்கர், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மலையாளத் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவர் நெடுமுடி வேணு. இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தேசிய விருது, கேரள மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.

தமிழில் 'இந்தியன்', 'அந்நியன்', 'பொய் சொல்லப் போறோம்', 'சர்வம் தாள மயம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 'இந்தியன் 2' திரைப்படத்திலும் நடித்துள்ளார். கோவிட் தொற்றிலிருந்து சமீபத்தில் மீண்டிருந்த நெடுமுடி வேணு, திடீர் உடல்நலக் குறைவால் அக்டோபர் 10-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நெடுமுடி வேணு, நேற்று (அக்டோபர் 11) சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருடைய மறைவு மலையாளத் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மோகன்லால், ப்ரியதர்ஷன் உள்ளிட்ட முன்னணிக் கலைஞர்கள் பலரும் நெடுமுடி வேணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

தமிழில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'இந்தியன்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் நெடுமுடி வேணு. அவருடைய மறைவுக்கு இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பதிவில், "நெடுமுடி வேணு சார்.. மிகச்சிறந்த மற்றும் அற்புதமான நடிகர். பணிவான மற்றும் அருமையான மனிதர். திரைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு. நீங்கள் காட்சிகளுக்கு உயிரூட்டும் மாயாஜாலத்தை மீண்டும் எப்போது பார்க்கப் போகிறோம் வேணு சார்? நாங்கள் உங்களை மிக அதிகமாக மிஸ் செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

நெடுமுடி வேணு மறைவுக்கு கமல் தனது ட்விட்டர் பதிவில், "500 படங்களில் நடிகர் என்பதோடு, திரைக்கதாசிரியர், இயக்குநர் எனவும் பரிமளித்தவர் நெடுமுடி வேணு. அனைத்துவகைச் செயல்பாடுகளுக்கும் தேசிய, மாநில விருதுகளை வென்றவர். 50 வருட சினிமா ஈடுபாட்டை நிறைவு செய்து மறைந்திருக்கிறார். அஞ்சலிகள்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழில் நெடுமுடி வேணு நடித்த கடைசிப் படம் 'சர்வம் தாளமயம்'. அதில் அவருடன் நடித்திருந்த ஜி.வி.பிரகாஷ், "ஒரு ஆளுமை இனி நம்மோடு இல்லை.. ஆன்மா சாந்தி அடையட்டும் நெடுமுடி வேணு சார். அன்பான மனிதர் மற்றும் சிறந்த ஆசிரியர். உங்களை மிஸ் செய்வேன் சார்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE