பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார்

By செய்திப்பிரிவு

பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 73.

பத்திரிகையாளராகத் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த நெடுமுடி வேணு 1978ஆம் ஆண்டு திரைத்துறையில் நுழைந்தார். அதற்கு முன் நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். கேசவன் வேணுகோபால் என்கிற இயற்பெயரை நடிப்புக்காக மாற்றிக் கொண்டார். அவரது பெற்றொரின் சொந்த ஊரே நெடுமுடி.

மலையாளத் திரையுலகின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் வேணு. இவரது குணச்சித்திர நடிப்புக்கென்றே எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர். கேரளாவைத் தாண்டி இந்தியா முழுவதிலும் திரைக் கலைஞர்களிடையே நெடுமுடி வேணுவுக்கென ஒரு அங்கீகாரம் உள்ளது.

இதுவரை கிட்டத்தட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நெடுமுடி வேணு 1990ஆம் ஆண்டு 'ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா' திரைப்படத்துக்காக சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.

2003ஆம் ஆண்டு, 'மார்க்கம்' திரைப்படத்துக்காக, சிறப்பு நடுவர் தேர்வாக தேசிய விருதை வென்றார். 2006ஆம் ஆண்டு திரைப்படம் அல்லாத படைப்பில் வர்ணனை செய்ததற்காக தேசிய விருது வென்றார். இவை தவிர 6 முறை கேரள மாநில விருதுகள், 3 ஃபிலிம்ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.

தமிழில் 'இந்தியன்', 'அந்நியன்', 'பொய் சொல்லப் போறோம்', 'சர்வம் தாள மயம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 'இந்தியன் 2' திரைப்படத்திலும் நடித்துள்ளார். நெடுமுடி வேணு கடைசியாக மலையாளத்தில் 'ஆணும் பெண்ணும்' திரைப்படத்தில் நடித்திருந்தார். மோகன்லால் - ப்ரியதர்ஷன் இணையின் 'மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்மம்' திரைப்படத்திலும் நெடுமுடி வேணு நடித்துள்ளார்.

கோவிட் தொற்றிலிருந்து சமீபத்தில் மீண்டிருந்த நெடுமுடி வேணு, திடீர் உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

திங்கட்கிழமை காலை நெடுமுடி வேணு கவலைக்கிடம் என்ற தகவலை மருத்துவர்கள் பகிர்ந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி காலமானது மலையாளத் திரை ரசிகர்கள் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்குத் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE