விமர்சனத்தில் நன்றாகத் திட்டுங்கள்; பழகிவிட்டது: சுந்தர்.சி

By செய்திப்பிரிவு

விமர்சனத்தில் நன்றாகத் திட்டுங்கள். ஏனென்றால் பழகிவிட்டது என்று இயக்குநர் சுந்தர்.சி பேசியுள்ளார்.

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அரண்மனை 3'. இந்தப் படத்தின் உரிமையைக் கைப்பற்றி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் அக்டோபர் 14-ம் தேதி வெளியிடுகிறது.

இதனை முன்னிட்டுப் படத்தை விளம்பரப்படுத்த 'அரண்மனை 3' படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்கள். இந்தச் சந்திப்பில் 'அரண்மனை 3' படம் உருவான விதம், நடிகர்கள் குறித்து விரிவாகப் பேசினார் இயக்குநர் சுந்தர்.சி. பின்பு தனது படங்களின் தன்மை மற்றும் விமர்சகர்கள் குறித்தும் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக சுந்தர்.சி பேசியதாவது:

"நான் ஒரு எளிய பொழுதுபோக்குக் கலைஞன். மக்களிடம் சொல்லப் பெரிய அறிவுரையோ, புதிய கதையோ, புரட்சிகரமான விஷயமோ என்னிடம் இல்லை. ரொம்ப எளிமையாக மக்களைச் சந்தோஷப்படுத்த நினைக்கக்கூடிய ஒரு கலைஞன். என் படம் பார்க்க வரும் அனைவரையுமே சந்தோஷப்படுத்தி அனுப்பவேண்டும் என்பது மட்டுமே ஒரே நோக்கம். அந்த வகையில்தான் என்னுடைய அனைத்துப் படங்களையுமே இதுவரை செய்துள்ளேன்.

விமர்சனம் என வரும்போது நன்றாகத் திட்டுங்கள். ஏனென்றால் பழகிவிட்டது. தயவுசெய்து விமர்சனத்தில் முழுக் கதையையும் சொல்லிவிடாதீர்கள். கதையில் 2 விஷயங்களை வைத்து அதற்கு ஒரு திரைக்கதையை அமைத்து என்னை மாதிரியான ஆட்கள் படம் இயக்குவோம். அந்த 2 விஷயங்களையும் விமர்சனத்தில் சொல்லிவிட்டால் புஸ் என்றாகிவிடுகிறது".

இவ்வாறு சுந்தர்.சி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE